கும்பாபிஷேக தினத்தன்று அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் அருகே உள்ள கோவில்களில் தரிசனம் செய்யுங்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
கோயில் கட்டி முடிக்கப்பட்டது குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்ட சம்பத் ராய், அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக நாளில் அயோத்திக்கு வர முடியாதவர்கள் அருகில் உள்ள கோவில்களில் ஒன்று கூடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அது சிறிய கோவிலாக இருந்தாலும் சரி, பெரிய கோவிலாக இருந்தாலும் சரி, அனைவரும் ஒன்றுகூடி பூஜை செய்யுங்கள் என்று கூறினார். கும்பாபிஷேக நாளில் அயோத்தியில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், ராமர் கோயிலின் கருவறை தயாராக இருப்பதாகவும் சம்பத் ராய் தெரிவித்தார். ஆனால், பிரம்மாண்டமான ராமர் கோவிலை முழுமையாக கட்ட இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்று சம்பத் ராய் தெரிவித்தார்