பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல்..!

Estimated read time 1 min read

பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ம் தேதியும், 11-ம் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இன்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.

பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று (11ம் தேதி) நடைபெறுகிறது. இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.

மீதிமுள்ள 122 தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 122 தொகுதிகள் 20 மாவட்டங்களில் அடங்கி உள்ளன. அங்கு மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 1,165 பேர் ஆண்கள், 136 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 95 லட்சம்பேர் ஆண்கள், 1 கோடியே 74 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

மொத்தம் 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து இன்று பதிவாகும் வாக்குகள் மற்றும் முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளன. அப்போது, பீகாரில் அடுத்து ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று தெரிய வரும்.

Please follow and like us:

You May Also Like

More From Author