சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது.
நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. இந்தத் தகவல்களை ஆய்வு செய்ததில் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
இதன்மூலம் நிலவில் நீர் இருக்கும் இடம்பற்றிய வரைபடத்தை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இதற்காக இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் என்ற உயர் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்து 400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ரேடார் வரைபடங்கள், நிலவின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி (Water-Ice) எங்கே மறைந்திருக்கிறது, நிலவின் மேற்பரப்பு எவ்வளவு கடினத்தன்மை (Roughness) கொண்டது, மற்றும் அந்த மண்ணின் அடர்த்தி (Density) எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. விஞ்ஞானிகள் இந்த ரேடார் சிக்னல்கள் நிலவின் மீது பட்டுத் தெறிக்கும் விதத்தை (CPR, SERD போன்ற குறியீடுகளை) ஆராய்வதன் மூலம், தரைக்குக் கீழே புதைந்திருக்கும் புவியியல் ரகசியங்களைக் கண்டறிகின்றனர்.
இந்த மாபெரும் உழைப்பின் பலனாக கிடைத்த இந்த டேட்டா தொகுப்புகளை, இஸ்ரோ இப்போது உலகெங்கிலும் உள்ள அறிவியல் சமூகத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது. இந்த முடிவுகள், எதிர்கால நிலவுப் பயணங்களுக்குப் பல வழிகளில் உதவும். இனி நிலவுக்கு செல்லும் விண்கலங்கள், மேடு பள்ளம் இல்லாத, பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்ய இந்த மேப் ஒரு ‘புதையல்’ போல உதவும்.
மிக முக்கியமாக, எங்கெல்லாம் பனிக்கட்டி நீடித்து இருக்கக்கூடும் என்பதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எதிர்காலத்தில் நிலவில் தளம் அமைக்கும்போது, இந்த பனிக்கட்டியை எரிபொருளாகவோ அல்லது குடிநீராகவோ பயன்படுத்திக்கொள்ள இது வழிகாட்டும். பல கோடி ஆண்டுகளாகச் சூரிய ஒளியே படாத இந்தப் துருவப் பகுதிகள், நமது சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால ரகசியங்களைப் (Chemical Signatures) பாதுகாத்து வைத்துள்ளன. இந்தப் புதிய வரைபடங்கள் அந்த ரகசியங்களை அவிழ்க்க உதவும்.
சுருக்கமாகச் சொன்னால், சந்திரயான்-2 ஆர்பிட்டர், நிலவின் கனிம வளம் மற்றும் அதன் வரலாறு குறித்த உலகளாவிய நமது புரிதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
