உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது
தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கருப்பொருளுடன் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடப்பாண்டு தமிழ் கற்கலாம் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடைபெறுகிறது.
இந்நிலையில் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து தொடக்க நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
மேலும் நிகழ்ச்சிக்காக தமிழ் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
இதனிடையே, ஒரே பாரதம் உன்னர பாரதத்திற்கு வலுசேர்க்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, வெற்றிகரமாக நடைபெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மன நிறைவான அனுபவங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.
