தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் 14 திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 25 அன்று, சுகாதாரத் துறை சார்பில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.313.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 14 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 25 அன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது நாடு முழுவதும் ரூ.11,391.79 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களைக் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 14 திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ.6.25 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 5 ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களுக்கு (IPHL) அவர் அடிக்கல் நாட்டுகிறார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் ரூ.118.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் 5 அவசர கால சிகிச்சை மையங்களுக்கும் (Critical Care Blocks -CCB) அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

கோயம்புத்தூரில் ரூ.4.63 கோடி மதிப்பில் உணவுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரியல் உணவு ஆய்வுக் கூடத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

சென்னை ஆவடியில் ரூ. 7.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய மத்திய அரசின் சுகாதாரத் திட்ட நலவாழ்வு மையத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

இதேபோல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ரூ.25 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டு காசநோய் ஆராய்ச்சி மையத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆதரவில் ரூ.151.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையம் மற்றும் ஆய்வகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதே போல் புதுச்சேரியிலும் ரூ.582.7 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள 2 திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

ஏனாமில் ரூ.91 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜிப்மர் பன்னோக்கு ஆலோசனை மையம், ரூ.491.7 கோடி திட்ட மதிப்பில் காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகம் ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author