அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 24ஆம் தேதி திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், கடந்த 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்குக் கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, தீப தரிசனம் பார்த்த பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலம் மேற்கொண்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் உற்சவத்தில் கோயில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார்.
இதனை அடுத்து, திருக்கார்த்திகை தீப தரிசன பலனை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
