ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் வருகிற 16-ஆம் தேதி நடைபெற இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அந்த கட்சியில் புதிதாக இணைந்த தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளிவந்த நிலையில் இதனை செங்கோட்டையன் மறுத்துள்ளார். அதாவது பவளத்தம் பாதையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்த நிலையில் தற்போது தாங்களே மாற்று இடத்தை தேர்வு செய்து போலீசாரிடம் அனுமதி பெற இருக்கிறோம் என்றார்.
அதன்படி விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முன்னதாக பவளத்தாம் பாளையத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த நிலையில் அதற்கு மாற்றாக இந்த கடிதத்தை கொடுத்து அனுமதி பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் போலீசார் அனுமதி மறுக்கவில்லை எனவும் நாங்களே எச்சரிக்கையாக வேறு இடத்தை தேர்வு செய்துள்ளோம் எனவும் அவர் கூறினார். இதன் மூலம் நடிகர் விஜயின் பொதுக்கூட்டம் அங்கு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
