என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!

Estimated read time 0 min read

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

ஈரான் பல்வேறு நாடுகளாக உடையலாம், அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் ஆருடங்களும் புறக்கணிக்கத்தக்கவையாக இல்லை. என்ன நடக்கிறது ஈரானில்?. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

இலங்கை, வங்தேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் ஏற்பட்டதை போலவே, தற்போது ஈரானிலும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், பேரணி, வன்முறை சம்பவங்கள் என ஒட்டுமொத்த ஈரானும் அமைதியை தொலைத்துள்ளது.

அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புதான் இதற்கு பிரதான காரணம். ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு டாலர் மதிப்புள்ள பொருளை வாங்க வேண்டும் என்றால், ஈரான் மக்கள் சுமார் 14 லட்சம் ரியால்களை வழங்க வேண்டும். அந்த அளவுக்கு அதன் மதிப்பு அதல பாதாளத்தில் உள்ளது.

இதனால், அரிசி, பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. வருடாந்திர பணவீக்க விகிதமும் அதிர்ச்சியூட்டும் வகையில் 40 சதவீதத்தை எட்டியது. நிலைமையை சமாளிக்க முடியாத ஈரான் அரசு, எரிபொருள் விலையை உயர்த்தியது.

மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை விலையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவித்தது. இத்தகை காரணங்களால், எதையும் வாங்க முடியாததாலும், எங்கும் செல்ல முடியாததாலும் ஈரான் மக்கள் குமுற தொடங்கினர். அந்த குமுறல்தான் தற்போது கட்டுப்படுத்த முடியாத போராட்டமாக வெடித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். அரசு கட்டங்களை தாக்கியும், பொதுச்சொத்துக்களுக்கு தீவைத்தும் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், அனைத்து இடங்களிலும் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

அரசின் அடக்குமுறையால், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதான அனைவரும் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை போன்ற கடும் தண்டனைகள் விதிக்கப்படும் எனவும், ஈரானின் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருந்தபோதும், பொதுமக்கள் பின்வாங்குவதாக இல்லை. தொடர்ந்து, போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது வழிப்பாட்டு தலமான மசூதிகளையும் அவர்கள் தீவைத்து கொளுத்தி வருகின்றனர். ஈரானின் மதகுருவும், உச்சபட்ச தலைவருமான கமேனியின் படத்தை பெண்கள் எரித்தும், அந்த நெருப்பில் சிகரெட் பற்றவைத்தும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் ஈரான் இளவரசர் ரெசா பஹ்லவி, மக்களின் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார். எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட்டு விட வேண்டாம் என்றும், முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றுபடியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல்வேறு நாடுகள் ஈரானுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. மேலும், ஈரானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரான் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதியான முறையில் போராடும் மக்களைக் கொலை செய்வதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால், அமெரிக்கா தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் மக்கள் சுதந்திரத்தை விரும்ப தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அவர்களுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவ தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானில் உள்ள பல்வேறு இனமக்கள் தங்களுக்கு தனிநாடு பிரித்துகொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வடமேற்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் குர்து இனமக்கள் இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

இப்படி, உள்நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டத்தாலும், உலக அரங்களில் எழுந்து வரும் கண்டனங்களாலும் ஈரான் அரசுக்கு நெருக்கடி வலுத்து வருகிறது. குறிப்பாக, மதகுரு கமேனிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஈரான் நிலைமை என்னவாகும்?. இதுதான் இன்றைய தேதிக்கு மில்லியன் டாலர் கேள்வி.

Please follow and like us:

You May Also Like

More From Author