Web team
மழைக்குருவி!
நூல் ஆசிரியர் : கவிஞர் கயல் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007.
பேச : 98429 74697, பக்கம் : 96, விலை : ரூ. 85.
******
நூல் ஆசிரியர் கவிஞர் கயல் அவர்கள் வேலூரின் பெருமைகளில் ஒன்றானவர். இதழியலில் முதுகலைப் பட்டம், வணிகவியல் மற்றும் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்று வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் துறை உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர். இவரது முதல் நூல் கல்லூஞ்சல் .
இரண்டாவது நூல் இந்த நூல். இல்லம், கல்லூரி என்று சராசரி பேராசிரியர்கள் போல சுருங்கி விடாமல் அதையும் தாண்டிச் சிந்தித்து கவிதைகள் எழுதி வருவது சிறப்பு. நூலாக்கி இருப்பது மேலும் சிறப்பு.
வாசகன் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளார். பாராட்டுக்கள். விமர்சனத்திற்காக அவர் தான் அனுப்பி இருந்தார்.
புதுக்கவிதைக்குப் புதுப்பாதை வகுத்த கவிவேந்தர் மு. மேத்தா, வேலூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கோ. விசுவநாதன், எழுத்தாளர் திரு. ஜே.வி. நாதன் ஆகியோரின் அணிந்துரைகள் வரவேற்புத் தோரணங்களாக வரவேற்கின்றன. முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்திட்ட முனைவர் திரு. ராஜா ஜஸ்டல் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.
இடக் கரடக்கல் !
அடிவயிற்றில் ஊசிக் குத்தலாய்
முழங்கால்களில் ஈர வாதையாய்
நெற்றிப் பொட்டில் தெறிக்கும் வலியாய்
இடுப்பில் மரணத் துவளலாய்
தொடரும் ஒரு நிகழ்வு
பந்தலிட்டு மேளங்கொட்டி
ஊரழைத்து உணவிட்டு
வாணவேடிக்கையோடு
கொண்டாடினாலென்ன?
மாதவிலக்கு நிரந்தரமாய்
நின்று போகும் நாளை!
வித்தியாசமான கவிதை, இதுவரை யாரும் பாடாத பொருளை, பாடுபொருளாக்கி பாடி உள்ளார். பெண்கள் மாதவிலக்கு காலங்களில் அடையும் துன்பத்தை சொற்களால் வடித்துள்ளார். இவ்வலி அறிந்திடாத ஆணாதிக்க சமுதாயத்திற்கு உணர்த்தும் வண்ணம் எழுதி உள்ளார்.
ஒரு பெண் பூப்பெய்தியதும் ஊர் கூட்டி சடங்கு நடத்துவது போலவே பூப்பெய்துவது முடிவுற்றதும் அதனையும் ஊர் கூட்டி கொண்டாட வேண்டும் என்கிறார். வலி வேதனையிலிருந்து அடையும் விடுதலையைக் கொண்டாடுவோம் என்கிறார். பெண்ணின் பெரும்பாட்டை உணர்த்திடும் கவிதை, இதுதான் பெண்ணியக் கவிதை.
மழைப் பேச்சு
மழைப் பேச்சு என்பது
மழையை
ரசித்தபடி
மனதுக்குப் பிடித்தவரிடம் பேசுவதல்ல
ஆதுரத்தோடு
நலம் விசாரித்தபடி
மழையிடம் பேசுவது.
மழையை ரசித்து உள்ளார் நூலாசிரியர் கவிஞர் கயல்.
இயற்கையை ரசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தான் கவிதை எழுதிடும் ஆற்றலும் வசப்படும். மழையோடு பேச வேண்டும் என்கிறார். பேசிய அனுபவத்தின் வெளிப்பாடே இவை.
முன்பெல்லாம்
மகள் பூப்பெய்திய
பின்னரே
பயப்படத் தொடங்குவர் /
பெற்றோர்.
இப்போதெல்லாம் சிலர் பெண் குழந்தை பிறந்தவுடனேயே அச்சம் கொள்கின்றனர். உறவினர்களும் வந்து உசுப்பேற்றி விடுகின்றனர். பெண் குழந்தையா? என்று கேட்பது, இரண்டாவது பெண்ணா? என்று நக்கலடிப்பது. இவைகள் ஒழிந்து சமுதாயம் சீராக வேண்டும்.
மரணத்தின் நிறம்!
சந்தன மரத்தால் எரியூட்டும் தமிழன் பாழும்
செம்மரத்திற்காயச் சுடப்பட்டானா?
வண்டுகள் கூட
தேர் மணிவாய்
கட்டிய தமிழன்
இன்று
வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு
வனமெங்கும் சிதறினானா?
நாளை
அழியும் ஆபத்திலுள்ள பட்டியலில்
சிட்டுக்குருவிக் கடுத்த இனம்
தமிழனெனக்
குறிக்கப்படுமா?
பறவைகளை, விலங்குகளை சுடக் கூடாது என்று அதற்குக் கூட அமைப்புகள் உள்ள நாட்டில் தமிழர்களை குருவிகளைச் சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈவு இரக்கமற்ற ஆந்திராவின் கொடூரத்தை மனிதாபிமானமற்ற தன்மையை உணர்த்தியது கவிதை. பாராட்டுக்கள்.
ஆணகராதி!
நிமிர்ந்த நன்னடை கர்வம்
நேர்கொண்ட பார்வை ஆணவம்
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெறி
அகங்காரம்.
செருத்த ஞானச்செருக்கு
படித்த திமிரென்று
ஆண் கற்ற அகராதி
கண்டெடுத்தால் வா கொளுத்து பாரதி!
மகாகவி பாரதியார் பாடல்களில் வைர வரிகளில் புதுமைப்பெண் தந்த விளக்கத்தை வேறு விதமாகப் புரிந்து கொள்ளும் ஆணாதிக்கச் சிந்தனையுடன் கூடிய அகராதியைக் கொளுத்தி விடு பாரதி வேண்டி இருப்பது சிறப்பு. இது தான் பெண்ணியக் கவிதை. பெண் பெருமை பேசிடும் கவிதை நன்று, பாராட்டுக்கள்.
பெண்ணாக இருந்தாலும் ஆணின் பார்வையில் வந்துள்ள காதல் கவிதை நன்று.
பூங்கா வேண்டாம் என்றால்
கேட்கிறாயா?
பார்
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைச் சுற்றிப் பறப்பதை!
தற்செயலாகக் கூட வண்ணத்துப் பூச்சி பறந்து இருக்கலாம். ஆனால் காதலன் கண்களுக்கு காதலியை மலர் என்று கருடி வட்டமடிக்கின்றதோ? என்ற கற்பனை அழகு.
அன்பு வழியும்
உன் கண்களால் பார்த்தேன்.
என்னை
அடடா
நான்
அத்தனை அழகு !
காதலின் முன்னுரை கண்களால் எழுதுகின்றனர் என்பது உண்மை. தலைவனும், தலைவியும் பார்க்கும் போது மேலும் அழகாகி விடும் விதத்தை, உண்மையை விளக்கும் கவிதை நன்று.
இளமை
ததும்பித் தளும்பும்
சிகப்பு ரோஜா
காதல்!
காமக் கசடு
களைந்த வெள்ளை ரோஜா
நட்பு.
காதலை விட காமமற்ற நட்பு உயர்ந்த்து என்பதை ரத்தினச் சுருக்கமாக சிகப்பு ரோஜா, வெள்ளை ரோஜா என்ற உவமைகள் மூலம் உணர்த்தியது சிறப்பு.
பிரிவின் பின்னான
சந்திப்பில்
பசித்த உடலை
மெல்ல வருடி
உணவின்
வாசனை போல்
தூண்டுகிறாய்
காதலை.
பிரிந்த இணைகள் இணையும் போது உண்டாகும் மகிழ்வான உணர்வை, உண்மையை மிக மென்மையாகவும், மேன்மையாகவும் எழுதி உள்ளார். பாராட்டுக்கள். கயல் அவர்களின் கவிதைகள், வீட்டில் தொட்டியில் நீந்தும் மீன்களை ரசித்தால் கிடைக்கும் இன்பம் போல உள்ளது. வாசகர்களுக்கு புதுக்கவிதை விருந்து மழைக்குருவி.