
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷிய அதிபர் புதினின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். போரைத் தொடர்ந்து நீட்டிப்பதன் மூலம் ரஷியா நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்து வருவதாகவும், இது புதினின் “முட்டாள்தனம்” என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்தத் தேவையற்ற உயிர்ச்சேதங்களைத் தடுத்து நிறுத்தி, போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் படைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முட்டாள்தனமான மனிதர்களிடமிருந்து உலகைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் இருப்பதை இந்தப் போர் உணர்த்துவதாகக் கூறிய ஜெலன்ஸ்கி, அமெரிக்காவால் மட்டுமே ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் மக்களுக்குத் துணை நிற்கும் நாடுகளுக்கும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
