கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களில் யார் உயிரோடு இருப்பார்கள், யார் உயிரோடு இருக்கமாட்டார்கள் என யாருக்கும் தெரியாது. காரணம், சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் வெள்ளம், அருகிலேயே அம்மா, அப்பா, மனைவி, மகன் யார் நின்றாலும் தெரியாது.
காரணம், எங்கும் மின்சாரம் கிடையாது. ஒரு பக்கம் பெருமழை மறுபக்கம் பயமுறுத்தும் பெரும்காற்று. இது அவர்கள் வாழ்வில் சந்திக்காத ஒரு பெரும் துயரம். ஆம், மிக்ஜாம் புயலின் தீவிரம் 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டது.
அந்த துயரத்திற்குச் சற்றும் குறையாத வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் பெருமழை வெளுத்து வாங்கி வருகிறது. திரும்பிய திசை எல்லாம் வெள்ளம். வீடுகள், வாகனங்கள், கார், பைக், லாரி என எல்லாமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீர் வரும் அளவு நிலைமை மோசமாகிவிட்டது.
திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், மழை பெய்த 2 முதல் 3 நாட்கள் வரை பாதிக்கப்பட்ட அரசின் நிவாரண உதவிகள், உடனே யாருக்கும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்கள் தங்குவதற்கு அதிக அளவு முகாம்களைத் தொடங்க வேண்டும் என்றும், அவர்களுக்குப் பால், குடிநீர், உணவு, உடை, போர்வை, அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுடன் மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அலட்சியம் காட்டாமல், இந்த 5 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. என்ன செய்யப்போகிறது திமுக அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.