இன்று வங்கி வேலைநிறுத்தம்: இந்த வேலைகள் நடக்காது!

Estimated read time 1 min read

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பிப்ரவரி 12 அன்று நடைபெறும் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என வாடிக்கையாளர்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் தகவலின்படி, எஸ்பிஐ, ஐடிபிஐ உள்ளிட்ட முக்கிய வங்கிகள் தொழிற்சங்கங்களிடமிருந்து முறையான வேலைநிறுத்த அறிவிப்புகளை பெற்றுள்ளன.

வங்கி கிளைகள் திறந்திருக்கும் என கூறப்பட்டாலும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பண பரிவர்த்தனை, காசோலை தீர்வு, டிராஃப்ட் வழங்கல் போன்ற சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே பணிகள் முடித்துக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய காரணம் மத்திய அரசு அறிவித்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் ஆகும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், இச்சட்டங்கள் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றி, ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை குறைக்கும் என குற்றமசாட்டப்படுகிறது. தொழிற்சங்க பதிவு கடினமாகி, நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மேலும், நீண்ட காலமாக வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை வாரம் கோரி வருகின்றனர். வாரத்தில் இரண்டு நாள் ஓய்வு வழங்கப்பட வேண்டும். அதிகமான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக வேலை-உயிர் சமநிலை அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். சம்பள முரண்பாடுகள் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பாதது போன்ற பிரச்சினைகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வராவிட்டால், அவர்களது ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. இதனால் இன்று அரசு ஊழியர்கள் பணிக்கு வருவது கட்டாயம்; வராதவர்களுக்கு ‘நோ வொர்க் – நோ பே’ விதி அமல்படுத்தப்படும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு இதுகுறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author