தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவும் சூழலில், இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இதில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் என்.டி.ஏ கூட்டணி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், புதிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், தமிழக பாஜக தாங்கள் போட்டியிட விரும்பும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என்றாலும், முக்கியத் தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளில் இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.
உதாரணமாக, சென்னையில் தமிழிசை சௌந்திரராஜன், வினோஜ் பி செல்வம் ஆகியோரும், கோவையில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் போன்றோரும் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தென் மாவட்டங்களில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி அல்லது சாத்தூர் தொகுதியிலும், விஜயதாரணி விளவங்கோடு தொகுதியிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. திருப்பூர் தெற்கு, ஈரோடு கிழக்கு போன்ற தொகுதிகளிலும் பாஜகவினர் இப்போதே தங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்பதும், ஓ.பி.எஸ் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் எந்தப் பக்கம் செல்லும் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், பாஜகவின் இந்த முன்கூட்டிய தேர்தல் பணிகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.
