
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது தேர்தல் அறிக்கையை வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு முக்கிய அம்சமாக, திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாகவோ அல்லது புதிய தலைநகரமாகவோ அறிவிப்பது குறித்த வாக்குறுதி இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச LED டிவி வழங்கும் திட்டமும் இந்த அறிக்கையில் முக்கிய இடம்பிடிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. இந்தத் தகவலைக் கேட்ட நெட்டிசன்கள், “என்னப்பா இது… ஒரே அடியா மெகா பிளான் போட்டு இறங்கிட்டாங்களே!” என சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பி வருகின்றனர்.
தேர்தல் அறிக்கை வெளியான அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 3-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் திருவாரூரிலிருந்து முறைப்படி தொடங்கவுள்ளார். கருணாநிதியின் கோட்டையிலிருந்து தொடங்கும் இந்தப் பிரச்சாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“திருச்சி டூ திருவாரூர்… ஸ்டாலினோட இந்த ரூட் மேப் வேற லெவல்ல இருக்கே!” என உடன்பிறப்புகள் இப்போதே கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். தலைநகர் மாற்றம் மற்றும் இலவச அறிவிப்புகள் என திமுக-வின் இந்த ‘மாஸ்’ மூவ், மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
