தமிழகத்திற்கு புதிய ஆளுநர்..! – பொறுப்பேற்ற கையோடு கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனம்..!

Estimated read time 0 min read

மேற்குவங்க ஆளுநராக பணியாற்றி வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மாநில ஆளுநர்களில் அதிரடி மாற்றங்களைச் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்குவங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அதேசமயம், கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாடு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவருக்குச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த முக்கிய நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பங்கேற்று புதிய ஆளுநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற கையோடு, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது மனைவியுடன் சென்னை மயிலாப்பூரில் புகழ்பெற்ற கபாலீசுவரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளை அறியும் வகையில் இந்த வழிபாட்டை அவர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், தமிழகத்தில் இருந்து மாற்றப்பட்ட ஆர்.என். ரவி, மேற்குவங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பால் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம் மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி தனது பணிகளைத் தொடங்கியுள்ளார்.

ஒரே நாளில் தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் பொறுப்பேற்றுக்கொண்டது இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இனி வரும் காலங்களில் கேரளாவோடு சேர்த்து தமிழகத்தின் ஆளுநர் பணிகளையும் கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author