
“மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவிலான வாக்குவங்கியைக் கொண்ட ஒரு அரசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும்.
மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது ஜனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது.
இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு மெகா கூட்டணி’ இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும் எனத் தெரிவித்துள்ள அவர், அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம்.
2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான் எனத் தெரிவித்துள்ள திருமாவளவன், வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை போன்ற யாவும் ஒரு கட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, வாக்குவங்கி வலிமை தான் முதன்மையானதாக அமைகிறது. கட்சிகளின் கருத்தியல் வலிமை அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.
தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோமென்றும் அறிவித்துள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
இந்த நெருக்கடியான சூழலில், மதவாத-திரிபுவாத-வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது கமல்ஹாசனும் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட ‘வாக்கு வங்கி வலிமையும், தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய நன்மதிப்பு வலிமையும் கொண்ட அண்ணன் கமல்ஹாசன் அவர்களை, ‘அவ்வாறு விட்டு விடமாட்டோம்’ என அவரை அரவணைத்துக்கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.
தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ‘டார்ச்’ சின்னத்தில் போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் ‘வெல்வோம் ஒன்றாக’ என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும் எனத் தெரிவித்துள்ளார்.
