அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியில் எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளதால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பெட்ரோல் மீதான சார்பைக் குறைக்க இந்திய அரசு ‘E85’ எனப்படும் புதிய எரிபொருள் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள E20 (20% எத்தனால்) பெட்ரோலைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக E85 எரிபொருளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த எரிபொருளில் 85 சதவீதம் ஆல்கஹால் (எத்தனால்) மற்றும் வெறும் 15 சதவீதம் மட்டுமே பெட்ரோல் கலந்திருக்கும். இதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ஏற்கனவே இதற்கான ஆரம்பகட்ட சோதனைகள் தொடங்கப்பட்டு, சந்தையில் சாதகமான சூழல் நிலவுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண பெட்ரோல் எஞ்சின்களில் E85 எரிபொருளை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தினால் எஞ்சினில் துருப்பிடித்தல் அல்லது சீல் பழுதடைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
எனவே, இந்த எரிபொருளைப் பயன்படுத்த ‘ஃப்ளெக்ஸ் ஃபியூயல் வாகனங்கள்’ (Flex Fuel Vehicles – FFV) தேவைப்படும். இந்த வாகனங்களின் எஞ்சின்கள் அதிகப்படியான எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படும்.
எத்தனால் என்பது கரும்பு, கோதுமை மற்றும் இதர தானியங்களில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக வெளிநாடுகளுக்குச் செலவிடப்படும் அன்னியச் செலாவணி பெருமளவு மிச்சமாகும்.
மேலும் மத்திய அரசின் உத்தரவுப்படி, ஏப்ரல் 1 முதல் அனைத்து மாநிலங்களிலும் E20 பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் E85 எரிபொருள் பயன்பாட்டிற்கு வரும்போது, எரிபொருள் இறக்குமதியில் இந்தியா முழுமையான சுயசார்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
