தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23, 2026) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் பரப்புரை செய்வதற்குத் தேர்தல் ஆணையம் முழுமையாகத் தடை விதித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தை ‘அமைதி காலம்’ (Silence Period) என ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ அல்லது தனிநபர்களோ கூட்டங்கள் நடத்தவோ அல்லது ஊர்வலம் செல்லவோ கூடாது.
விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.இதேபோல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தேர்தல் தொடர்பான பரப்புரைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சிச் சின்னங்களைக் குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பதோ அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாகப் பதிவுகளைப் பகிர்வதோ சட்டப்படி குற்றமாகும்.
இத்தகைய விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில் சமூக வலைதளங்கள் தீவிரமாகத் தேடுதல் செய்யப்படுவதால், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அக்கவுண்ட்களை இழக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த வேட்பாளர்களின் சின்னங்களை இந்த 48 மணி நேர இடைவெளியில் பரப்புரை செய்வதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
