சென்னை : நாளை (ஏப்ரல் 23, 2026) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள தகவலின் படி, தமிழ்நாட்டில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2.77 கோடி ஆண் வாக்காளர்களும், 2.89 கோடி பெண் வாக்காளர்களும் அடங்குவர். முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 14.59 லட்சம் ஆகும். மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கருதப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) பயன்படுத்தப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்காக மாநிலம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் வலுவாக உள்ளன. 85,875 காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 300 கம்பெனி துணை ராணுவப்படையினர் (CRPF) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இதுவரை 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நட்சத்திர வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அடங்குவர்.
அர்ச்சனா பட்நாயக் பேசுகையில் “வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களைப் பாதுகாக்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாக்குச்சாவடிக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.”தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக, இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.719 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன” எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நடைபெறும் வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்துமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
