எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பிரவீன் குமார், தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் போட்டியிடும் பிரவீன் குமாருக்கு நடிகர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இதனால் உற்சாகமடைந்த பிரவீன் குமார் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தான் காரில் சென்று கொண்டிருந்தபோது 4 மர்ம நபர்கள் வழிமறித்து, “எடப்பாடி தொகுதி பக்கமே வரக்கூடாது” என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தவெக-வின் ஆதரவு அவருக்கு இருப்பதால், தேர்தல் களத்தில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என நினைக்கும் சில கும்பல் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. எடப்பாடி தொகுதி அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் நிலையில், அங்கு தவெக ஆதரவு வேட்பாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தேர்தல் களத்தில் நிலவும் கடும் போட்டியை உணர்த்துகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
