இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று (8.11.2026) நடைபெற்றது.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ‘போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லா வளாகம்’ குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கைகள் முதலமைச்சர் முன்னிலையில் காணொளி வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதை முதலமைச்சர் காணொளி வாயிலாக பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மாணவர்கள், “நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்.
போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களை சிறப்பாக செயல்படுத்திய மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகளுக்கான முதல் பரிசு, கோவை செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
– வைஷ்ணவி பாலு
