543 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது: சட்டசபையில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!

Estimated read time 0 min read

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார். 543 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என வழியுறுத்தியுள்ளார்.

சரியாக காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.

ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்று பெண்களின் பெருமை குறித்து முதலமைச்சர் பேசினார்.

தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டதில் ஆலோசிக்கப்பட்டவை குறித்து முதலமைச்சர் விஜய் எடுத்துரைத்தார். “ஆறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது. இதுகுறித்து பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிவரும் முதலமைச்சர், ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டு 131ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவையும், 2026ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவையும் தாக்கல் செய்தது. ஆனால் 2026 ஏப்ரல் 17ஆம் தேதி, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், அந்த மசோதா நிறைவேறவில்லை. அதாவது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இதனை இணைப்பதால், அதனை நடைமுறைப்படுத்த மேலும் பல ஆண்டுகள் காலதாமதம் ஏற்படும்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கான மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டைச் செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தினால், அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் காலம் தாழ்த்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பெண்களின் அரசியல் உரிமையை மறுக்கும் செயலாகும்.

எனவே, மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து அதனை ஒத்திவைக்கக்கூடாது. மேற்படி தொகுதி ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

You May Also Like

More From Author