விஜய், செங்கோட்டையனை ஜெ. ஆன்மா மன்னிக்காது: டிடிவி தினகரன்

Estimated read time 1 min read

“அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்துவிட்டு, தற்போது ஆட்சியைத் தக்கவைக்க அவர்களின் ஆதரவைக் கேட்பதா? இன்ஸ்டாகிராமிலேயே ஆட்சி நடத்திவிடலாம் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நினைக்கிறார்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போதைய தவெக ஆட்சியின் அரசியல் சூழல் மற்றும் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு குறித்துக் காரசாரமாகப் பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் பேசியதாவது,

“தமிழக வெற்றிக் கழக அரசின் ஆட்சியின் ஆயுட்காலம் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவையும், அதன் லட்சக்கணக்கான தொண்டர்களையும் அழிக்கத் தவெக பார்க்கிறது. அப்படிப்பட்ட கட்சிக்கு, அதிமுக தொண்டர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு அமைச்சர் பதவிக்காக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளிப்பது எந்த வகையில் நியாயமாகும்? இது அரசியல் அறம் அல்ல.

வேலுமணி அணியினர் இந்த விஷயத்தில் அவசரப்பட வேண்டாம், அது உங்களையேதான் பாதிக்கும். இன்ஸ்டா ரீல்ஸைப் பார்த்து தவெகவுக்கு வாக்களித்த மக்கள், தற்போது நிஜ உலக எதார்த்தத்தைப் பார்க்கும்போது மிகவும் வருத்தப்படுகிறார்கள்.

அதிமுகவை அழிக்க நினைக்கும் விஜய்யின் தவெக அரசுக்குத் துணை போகும் செங்கோட்டையனை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா எப்போதுமே மன்னிக்கவே மன்னிக்காது.

ஒரு அரசியல் கட்சியின் தலைமைதான் சட்டமன்றக் குழு நிர்வாகிகளை (கொறடா) நியமிக்க முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள கொறடாவின் உத்தரவுதான் சட்டப்படி செல்லும்.

கொறடாவின் உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகும். இறுதியில் அவர்கள் ரோட்டில்தான் நிற்கப் போகிறார்கள்.

அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் அரசு அமைச்சர் பதவி தருவது என்பது, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தன் தலையையே சொறிவதற்குச் சமம். அமமுக அல்லது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசில் அமைச்சரானால், அங்குப் பெரிய அளவில் குதிரை பேரம் நடந்துள்ளது என்பது உறுதியாகிவிடும்.

அப்படி நடக்கும் பட்சத்தில், இந்த விவகாரத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கோருவோம். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், முன்பு டெல்லியில் நடந்த ‘சிபுசோரன் வழக்கு’ போன்ற சட்ட நெருக்கடி நிலைதான் தவெக அரசுக்கு ஏற்படும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author