சென்னை : தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், மகாராஷ்டிராவிலும் ஒரு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளதால், அங்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாகியது. அதேபோல், மகாராஷ்டிராவில் சுனேத்ரா அஜித் பவாரும் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த இரு காலியிடங்களுக்கும் தற்போது தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 8ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்கள் மீது ஜூன் 9ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். அதன்பிறகு, வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோருக்கு ஜூன் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஜூன் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது புதிய அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் மாநிலங்களவை தேர்தல் என்பதால், எந்த கட்சி வேட்பாளரை களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், சி.வி. சண்முகத்தின் ராஜினாமாவுக்கு பிறகு காலியாக உள்ள இடத்தில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்தும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
