கன்னியாகுமரி மேற்கு கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாட்கள் தடை விதிப்பது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மீன்பிடித் தடைக்காலம் 2 பருவமாக உள்ள நிலையில், கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலமாக உள்ளது.
மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி மற்றும் கேரள அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 1 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தடைக்காலம் அமலில் இருக்கும்.
அந்த வகையில், கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால், ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர்.
மேலும், மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு விசைப்படகினர் தங்கள் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை பராமரித்து வருகின்றனர்.
