தமிழ்நாட்டில் 2031-க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்..!

Estimated read time 1 min read

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசின் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்குப் பார்வையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக, 2031ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பொது மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பல்வேறு கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மின்சார வாகன பயன்பாட்டை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், ஆரம்ப முதலீட்டு தடைகளை குறைத்தல் மற்றும் உலகத் தரத்திலான EV சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், நிலையாக போக்குவரத்துத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் 13.7.2026 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, 14.7.2026 அன்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

யூனிட் கட்டணம்

தற்போதுள்ள உயரழுத்த/அதிஉயரழுத்த HT/EHT மின் இணைப்புகளில் துணை மின்மீட்டர் (EV Sub-meter) வசதி; தற்போதுள்ள உயரழுத்த/அதிஉயரழுத்த (HT/EHT) மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின்சுமை வரம்பிற்குள் அமைக்கப்படும் EV சார்ஜிங் வசதிகளுக்கு தனி துணை மின்மீட்டர் (EV Sub-meter) அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்,

  • தனி மின் இணைப்பு பெற வேண்டிய அவசியமில்லை.
  • நிலைக்கட்டணம் / குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் (Fixed/ Demand Charges) விதிக்கப்படாது.
  • மின் வாகன (EV) மின் கட்டணத்தின் கீழ் மின்பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணம் (Energy Charges) மட்டும் வசூலிக்கப்படும்.

இந்த நடைமுறையால் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கூடுதல் மின் உள்கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, குறைந்த முதலீட்டில் விரைவாக மின்வாகன (EV) சார்ஜிங் வசதிகளை அமைக்க முடியும்.

தனி மின் இணைப்பு பெறும் வசதி

தற்போதுள்ள நுகர்வோரின் மின்சுமை மற்றும் கட்டணப் பிரிவை பாதிக்காமல், தேவையுள்ள இடங்களில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின் சேவை இணைப்பை பெறவும் அனுமதி வழங்கப்படும்.

மின்வாகன (EV) கொள்கையில் திருத்தங்கள் மற்றும் கட்டணச் சலுகைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை

மாநிலத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு முதலீடுகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023-ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, மின் வாகன மின்னேற்ற உள்கட்டமைப்பு உருவாக்கும் முனைவோர்கள்/ முதலீட்டாளர்கள் (EV Charging Infrastructure Developers) அதிகளவில் முதலீடு செய்ய ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான (EV Charging Station) தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம்/குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை (Fixed/Demand Charges) முழுமையாக விலக்கு அளிக்கவோ அல்லது கணிசமாகக் குறைக்கவோ அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2031-க்குள்

இந்த முக்கிய நடவடிக்கைகள் மூலம், மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட தடைகள் பெருமளவில் குறைக்கப்படுவதுடன், தனியார் முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு அதிகரிக்கும்.

இதன்மூலம் மாநிலம் முழுவதும் பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக விரிவுபெற்று, 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை விரைவாக அடைய வழிவகுக்கும். மேலும், பசுமை போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாடு நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதற்கும் இந்த நடவடிக்கைகள் உறுதுணையாக அமையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author