சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 15ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நகரங்களின் புத்தாக்கத்தை உயர் தரத்துடன் முன்னேற்றுவது நகரப்புற நவீனமயமாக்க கட்டுமானத்தில் முக்கிய பகுதியாகும். மக்களை மையமாகக் கொண்ட நகரங்கள் என்ற சிந்தனையைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களின் தேவை மற்றும் விருப்பங்களுக்கிணங்க, நகரங்களின் சீரமைப்புப் பணிகளை ஆழமாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்த வேண்டும். மக்களின் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றார்.
ஹூவாங்ஃபு பிரதேசத்திலுள்ள ஷிமின்சின்ட்சுன் எனும் குடியிருப்புப் பகுதியில் ஷிச்சின்பிங் கள ஆய்வு மேற்கொண்ட போது நகரப்புற பணிக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பெரும் கவனம் செலுத்தி வருவதாக வலியுறுத்தினார். புத்தாக்கம், வசதி, எழில் மற்றும் நாகரீகத்துடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட மக்களின் நகரைக் கட்டியமைக்க வேண்டுமென அவர் தெளிவாக முன்வைத்தார். பழைய குடியிருப்புப் பகுதிகளை மறுசீரமைப்பது அவற்றில் முக்கியமானதொரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
