கேரளா : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடுமையான மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இத்துடன் மழைக்கால தொற்றுநோய்களும் வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் தீவிர பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
கேரளாவில் இன்று மிக பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மலைப்பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும், அவசரத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழையைத் தொடர்ந்து தேங்கும் அசுத்தமான நீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாகக் கேரளாவில் பின்வரும் நோய்ப் பாதிப்புகள் வேகமாகப் பரவி வருகின்றன:
ஷிகெல்லோசிஸ் (Shigellosis) – கடுமையான வயிற்றுப்போக்கு நோய்
டைபாய்டு (Typhoid) – குடல் காய்ச்சல்
எலி காய்ச்சல் (Leptospirosis)
“சரியான சுகாதாரமே இந்த நோய்களைத் தடுக்கும் சிறந்த வழி” என்று தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, “தனிநபர் சுகாதாரமும், சுற்றுப்புற தூய்மையும் உயிரைக் காக்கும்” என்ற முழக்கத்துடன் சில முக்கியக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள்:
உயிர் பாதுகாப்பு நம் பொறுப்பு என்பதை உணர்ந்து, கைகளைச் சுத்தம் செய்தல், தூய்மையான நீர் பருகுதல் மற்றும் சுத்தமான சுற்றுப்புறத்தை உறுதி செய்தல் ஆகியவற்றைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
