12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் ‘குறிஞ்சி பூ’…படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

Estimated read time 1 min read

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக வனப்பகுதி மொத்தமும் பசுமையாகக் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக அரிய வகை பூக்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்க தொடங்கி உள்ளன.

அந்த வகையில், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய குறிஞ்சி மலர்களும் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பூக்கத் தொடங்கி உள்ளன. ஊதா மற்றும் நீல நிற குறிஞ்சி மலர்கள் மலைப் பகுதி முழுக்க பூத்திருப்பது பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. முக்கியமாக, நீலகிரி மலையின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது.

மரப்பாலம், பெரிய சோலை, ஊசிமலை மற்றும் அங்குள்ள சில பிரபல பூங்காக்களிலும் குறிஞ்சி மலர்கள் மிக அதிக அளவில் பூத்துள்ளன. இதனால் பூக்கள் பூத்திருக்கும் அந்த பகுதியே மிகவும் ரம்மியமாகவும், கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் காட்சியளிக்கத் தொடங்கி உள்ளது.

உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மலைப் பாதைகள் மற்றும் ஊசிமலை காட்சி முனைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

இதில், பலர் பூக்கள் பூத்திருக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக் கூடிய இந்த பூக்களைக் காண சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நீலகிரியில் தற்போது குவிய தொடங்கி உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அதிக அளவில் தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் குறிஞ்சி மலர்களை நாடி வருவதை நம்மால் காண முடிகின்றது.

அதேசமயம், ஓவேலி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.சுற்றுலா பயணிகள், குறிஞ்சி பூக்களை பறிப்பதை தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குறிஞ்சி மலர் செடிகள் அருகே சென்று புகைப்படம் எடுக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆகையால், தூரத்திலிருந்தே சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்..

You May Also Like

More From Author