திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் ஏழு பேர் ஒடிசாவையும், இரண்டு பேர் அசாமையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அமோனியா வாயு கசிந்த விபத்தில் ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் மரணமடைந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மரணமடைந்தர்.
இந்த மருத்துவமனையில் மொத்தம் 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 2 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இந்நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்ததால், தற்போது மீதமுள்ள 10 பேருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில், 2 பேர் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
