தமிழ்நாட்டில் ரேஷன் பொருள்களைப் பெறுவது தொடர்பாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கட்ரமணன் தமிழக சட்டப்பேரவையில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,495 கடைகளும், அதற்கு அடுத்தபடியாகச் சேலம் மாவட்டத்திலும் அதிக அளவிலான ரேஷன் கடைகள் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களின் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது பொதுமக்கள் தங்களது அசல் ரேஷன் அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பலர் கடைக்குச் செல்லும்போது தவறுதலாக ரேஷன் கார்டை மறந்துவிட்டுத் திரும்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதற்குத் தீர்வாக, இனி ரேஷன் கார்டின் சாஃப்ட் காப்பி அல்லது அட்டை எண் இருந்தால் மட்டுமே போதுமானது; அதன் மூலமாக எளிதாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்பவர்களுக்கும், வாடகை வீடு மாறிச் செல்பவர்களுக்கும் அரசின் இந்த புதிய நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தங்களுக்குரிய ரேஷன் கடைகளில் மட்டுமின்றி, தங்களுக்கு அருகில் இருக்கும் எந்தவொரு ரேஷன் கடமையிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற தளர்வு நடைமுறையில் உள்ளது. இந்த வசதி குறித்து இன்னும் பல பொதுமக்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை என்பதால், இந்தச் சட்டப்பேரவையின் வாயிலாக இதனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க விரும்புவதாக அமைச்சர் ப.வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
