அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள நல்லகண்ணு அவர்களுக்கு நினைவு இல்லை, மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை செய்து வருகிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீ்வ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனை வருகை புரிந்தார்.
மருத்துவமனையில் உள்ள நல்லகண்ணு குடும்பத்தாரிடமும், மருத்துவர்கள் இடமும் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோம், “பொது உடைமை கட்சியில் சிறுவயதில் இருந்தே தன்னை இணைத்து கொண்டு பல ஆண்டுகள் சிறைகளிலும், சில ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து இருக்கிறார். பல்வேறு சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதை அனைத்தையும் தாங்கி கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களில் கலந்து கொண்டவர்.
நல்ல படிப்பாளி அவர், ஒரு புத்தக நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு முன்னே அந்த புத்தகத்தை படித்து தான் அந்த நிகழ்ச்சிக்கு செல்வார். இப்படி அவரிடம் கற்றுகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. மாற்றுக்கட்சியில் இருப்பவர்களையும் மதிக்ககூடிய நபர் அவர். ஜாதி மதம் எல்லகைளுக்கு அப்பாற்ப்பட்டு மனித நேய உணர்வோடு பொதுவாழ்வில் சேவை செய்தவர். நேர்மை எளிமை கடமையாக கொண்டு எங்கள் அனைவருக்கும் முன்உதாரணமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு இல்லை, அரசு மருத்துவமனையில் தகுந்த சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.
கடந்த காலங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் நான் வந்து அவரை பார்த்தேன். அப்போது மீண்டு வந்ததது போல, இப்போதும் அவர் மீட்டு வருவார்” என தெரிவித்தார்.
