சாதாரண பஸ் மட்டுமல்ல.. இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸிலும் கட்டணம் இல்லை- முதல்வர் அறிவிப்பு!

Estimated read time 1 min read

சென்னை : இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், பெண்களின் பயணச் சுதந்திரத்தை மேம்படுத்தும் வகையிலான ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம் குறித்த மிக முக்கிய அறிவிப்பைத் முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதன்படி, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டமானது மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக, இதுவரை சாதாரணப் பேருந்துகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த கட்டணமில்லாப் பயணம், இனி மாநகரம் மற்றும் நகர் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் போன்ற அரசுப் பேருந்துகளிலும் மகளிர்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகப் புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாப் பயணங்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, இதில் பயனடைவதற்கு எந்தவிதமான வருமான உச்சவரம்போ அல்லது மாதத்தில் மேற்கொள்ள விரும்பும் பயணங்களின் எண்ணிக்கையிலோ எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

அத்துடன், இத்திட்டத்தின்கீழ் திருநங்கைகளும் கட்டணமில்லாப் பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், பணியிடங்களுக்கும், மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளுக்கும் எவ்விதத் தடையுமின்றிச் சென்று வரப் பேருந்து வசதி பெருமளவில் கைகொடுக்கும்.

இந்த ‘வெற்றிப் பயணம்’ என்பது வெறும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் மட்டுமல்லாமல், ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு மற்றும் ஒரு பெண் தொழில்முனைவோரின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்யும் மாபெரும் சமூக முதலீடாகும் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் பெண்களின் இயக்க சுதந்திரத்திற்கும், சமூக நீதியும் சமத்துவமும் நிலைபெற்று வளமான வெற்றித் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் மேலும் வலுசேர்க்கும் எனவும் கூறினார். இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ஆறாயிரம் கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author