சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 13ஆம் நாள் காலை புது தில்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2ஆவது கட்ட கூட்டத்தில் பங்கேற்று, “பிரிக்ஸ் ஒத்துழைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்தி தெற்குலக சக்தியை விரிவாக்குதல்”என்ற தலைப்பில் முக்கிய உரையை ஆற்றினார் அதில் பிரிக்ஸ் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து ஷிச்சின்பிங் 5 முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவது, திறந்த மூல செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் பயனளித்தல். பிரிக்ஸ் நாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவின் திறந்த மூல மண்டலத்தைச் சீனா முதலில் நிறுவவுள்ளது. பெரிய மொழி மாதிரியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு ஆதரவளித்து செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு பயிற்சியை நிறுவி இத்துறையின் திறந்த சூழலைச் சீனா உருவாக்க உள்ளது.
2ஆவது வர்த்தக முதலீட்டு வசதிமயமாக்குதல். பிரிக்ஸ் நாடுகளிடையே சிறப்புப் பொருளாதார மண்டலக் கூட்டாளி உறவைக் கட்டியமைத்து நுண்ணறிவார்ந்த தளத்தை நிறுவி கொள்கை ரீதியிலான இணைப்புப் பணிகளை மேற்கொண்டு, திறந்த வளர்ச்சியின் புதிய நிலையை உருவாக்க வேண்டுமென சீனா முன்மொழிந்துள்ளது.
3ஆவது எண்ணியல் தொழிலில் ஒத்துழைப்பு முன்மொழிவு. பிரிக்ஸ் நாடுகளின் எண்ணியல் தொழிலுக்கான கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தின் கட்டுமானத்தைச் சீனா முன்னேற்றும். அதன் மூலம், எண்ணியல் நுட்பங்களின் பயிற்சியளிப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில்களிடையே தொடர்பு ஆகியவற்றை மேற்கொண்டு எண்ணியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னெடுக்கும்.
4ஆவது நுண்ணறிவுத் தயாரிப்பு ஒத்துழைப்பு. செயற்கை நுண்ணறிவு தொழிற்சாலையைப் பிரிக்ஸ் நாடுகள் கட்டியமைப்பதற்கு உதவியளித்து வரையறை கொண்ட அமைப்பு முறையை உருவாக்கி தயாரிப்புத் தொழிலின் சீர்திருத்தத்தைக் கூட்டாக விரைவுபடுத்தச் சீனா விரும்புகிறது.
5ஆவது அறிவியல் தொழில்நுட்ப திறமைசாலிகளை உருவாக்குதல். பொறியியலாளர்கள் உருவாக்கத்திற்கான பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை நிறுவி பொறியியலாளர்களின் கூட்டு பயிற்சி மற்றும் திறனுக்கான பரஸ்பர அங்கீகாரத்தை மேற்கொள்ளச் சீனா முன்மொழிந்துள்ளது. அதோடு, மேலதிக அறிவியல் திறமைசாலிகளை உருவாக்கும் விதம், பிரிக்ஸ் இளைஞர்களின் அறிவியல் புத்தாக்கப் பரிமாற்றத் திட்டத்தைச் சீனா நடத்தவுள்ளது என்று ஷிச்சின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.
