நிலவில் உருவான 728 அடி பிரம்மாண்ட பள்ளம் கண்டுபிடிப்பு..!

Estimated read time 1 min read

நிலவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகக் கருதப்படும் மிகப்பெரிய தாக்கத்தின் தடயத்தை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். நிலவின் பூமிக்கு தெரியும் பகுதியில் 728 அடி (222 மீட்டர்) அகலமும், 141 அடி (43 மீட்டர்) ஆழமும் கொண்ட புதிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. நாசாவின் லூனார் ரெக்கானசன்ஸ் ஆர்பிட்டர் (LRO) எடுத்த படங்களை ஆய்வு செய்தபோது இந்த பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது. சமீப காலங்களில் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய தாக்கப் பள்ளங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த பள்ளம் ஒரு சிறுகோள் அல்லது வால் நட்சத்திரத்தின் உடைந்த பகுதி நிலவில் மோதியதால் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் பகுதி பதிவாகியிருந்தாலும், அதிக அளவிலான தரவுகளுக்கு இடையில் புதிய பள்ளம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விஞ்ஞானிகள் இதை கண்டறிந்தனர். பின்னர் எடுக்கப்பட்ட விரிவான படங்கள் மூலம் பள்ளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த மோதலின் தாக்கம் பள்ளம் உருவான இடத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த மோதலின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், பள்ளத்தைச் சுற்றி சுமார் 7 கிலோமீட்டர் பரப்பளவில் நிலவின் மேற்பரப்பு மண் மற்றும் பாறைகள் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலவில் ஏற்படும் தாக்கங்கள் மேற்பரப்பை எவ்வாறு மாற்றுகின்றன என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிலவில் பெரிய அளவில் தாக்கங்கள் ஏற்படுவதால் அதன் மேற்பரப்பு எதிர்பார்த்ததைவிட வேகமாக மாறி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகள் தொடர்ந்து மோதல்களால் கிளறப்பட்டு, கீழே இருக்கும் பொருள்கள் மேலே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான தளங்களை அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற தாக்கங்களால் ஏற்படும் பாறைகள் மற்றும் மண் துகள்கள் எதிர்கால நிலவு தளங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்து குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

You May Also Like

More From Author