ஆகஸ்ட் 26, 2026 அன்று நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு, சாதாரண வெள்ளம் அல்ல என்று உலக வானிலை தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லாங்டாங் லிருங் மலையில் சுமார் 2 சதுர கி.மீ. அளவிலான பாறை மற்றும் பனிப்பாறைப் பகுதி சரிந்து விழுந்தது. அது பாறை, பனி, சேறு மற்றும் தண்ணீருடன் கூடிய மிகப்பெரிய திடீர் வெள்ளமாக மாறியது.
இந்த பேரழிவுக்கு ஐந்து முக்கிய காரணிகள் பின்னணியில் இருந்ததாக WWA ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. முதலாவது, இமயமலைப் பகுதியில் அதிகரித்த வெப்பநிலை. இரண்டாவது, பனிப்பாறைகள் தொடர்ந்து மெலிந்து வருவது. மூன்றாவது, பல ஆண்டுகளாக உறைந்திருந்த மலைப்பகுதி மண் மற்றும் பாறைகளில் உள்ள பனிப்படலம் உருகுவது. நான்காவது, வழக்கமாக பனியாக பெய்ய வேண்டிய மழைப்பொழிவு அதிகமாக மழையாக மாறியது. ஐந்தாவது, அதிக அளவில் உருகிய பனி மற்றும் நீர் சேர்ந்து சரிவை மேலும் நிலையற்றதாக்கியது.
மேலும், அந்த மலைப்பகுதி ஏற்கெனவே புவியியல் ரீதியாக பலவீனமானதாக இருந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட 7.8 அளவிலான நிலநடுக்கமும் அடிப்பாறையை பலவீனப்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலநடுக்கம் தற்போதைய பேரழிவில் எந்த அளவுக்கு பங்கு வகித்தது என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தில் மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் நேரடியாக ஒரே காரணம் என்று WWA கூறவில்லை. ஆனால் நீண்டகால வெப்பநிலை உயர்வு, பனிப்பாறை மெலிவு மற்றும் உறைந்த மலைப்பகுதிகள் உருகுதல் போன்றவை ஏற்கெனவே பலவீனமாக இருந்த சரிவை மேலும் நிலையற்றதாக்கியதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதுபோன்ற தொடர் பேரழிவுகளை எதிர்கொள்ள இமயமலைப் பகுதிகளில் முன்கூட்டிய கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் மிகவும் அவசியம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
