பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனது மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் மீதான புகாரில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை முருகானந்தத்தை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிற மூத்த தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமான புகாரை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், முருகானந்தம் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதாகவும், தனது பொறுப்பிலுள்ள குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் பாதுகாவலராகப் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட தனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததாகவும் திவ்யா சேஷாத்ரி குற்றம் சாட்டி இருக்கிறார்.
முருகானந்தம் உடன் உறவில் இருந்ததால், தான் கர்ப்பமடைந்ததாகவும், தனது விருப்பத்திற்கு மாறாகக் கருவைக் கலைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
