புரட்டாசியில் பெருமாள் அருள் பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரப் பாசுரம்….!! 

Estimated read time 0 min read

புரட்டாசி மாதம் என்றாலே திருமாலின் அருளையும், திருவேங்கடவனின் ஆசிகளையும் பெற மக்கள் பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பெருமாளைப் போற்றிப் பாடும் பல திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் தினமும் பாடி வழிபட்டால் பெருமாளின் முழு அருளையும் பெறக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த ஒரு பாசுரம் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் உள்ளது.

பொதுவாக இறைவனிடம் நாம் செல்வம், நல்வாழ்வு, வெற்றி போன்றவற்றை மட்டுமே வேண்டுவோம். ஆனால், குலசேகராழ்வார் பெருமாளிடம் பொன் பொருளைக் கேட்காமல், பெருமாள் திருக்கோயிலின் வாசலில் அடியார்கள் மிதித்துச் செல்லும் ஒரு “படியாகக்” கிடக்கும் வரத்தைக் கேட்டார். அவரின் இந்தத் தூய்மையான பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாளும் அவர் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார். இதன் காரணமாகவே இன்றளவும் அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரப் படி” என்று அழைக்கப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் தினமும் சொல்ல வேண்டிய அந்தச் சிறப்புமிக்க பாசுரம்:

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!”

இப்பாடலின் பொருள் என்னவென்றால்: முள்செடிகளைப் போல வாழ்வில் துன்பங்களை உருவாக்கும் கொடிய வினைகளைத் தீர்க்கும் திருமாலே! திருவேங்கடவா! உன் கோயிலின் வாசலில் அடியார்களும், தேவர்களும், தேவலோக மங்கையரும் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் மிதித்துச் செல்லும் வாசற்படியாக நான் இருந்தால், பக்தர்கள் பலரின் பாதங்கள் என் மீது படும். அதே நேரத்தில், எப்போதும் உன் பவளம் போன்ற திருவாயையும் எழில்மிகு திருமேனியையும் தரிசித்துக்கொண்டே இருக்க முடியும். எனவே, உன் கோயில் வாசற்படியாக இருக்கும் பாக்கியத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்பதாகும்.

பெருமாளை மட்டுமன்றி, அவரது பக்தர்களுக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் மிகச்சிறந்த சேவை என்பதை இப்பாசுரம் உணர்த்துகிறது. செல்வமோ, பதவியோ இன்றி உண்மையான பக்தி மட்டுமே இறைவனை அடையப் போதுமானது என்ற உயரிய தத்துவத்தைக் கூறும் இப்பாடலைப் புரட்டாசி மாதத்தில் தினமும் பாடி மனதார வழிபட்டால், நம் துன்பங்கள் நீங்கி பெருமாளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

You May Also Like

More From Author