
மழைக்காலங்களில் தேங்கும் தூய்மையான தண்ணீரில் உருவாகும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழைக்கு முன்னரே டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.அண்ணா பல்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரிஷ்குமார், 21, சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பாதிப்பு தீவிரமடைந்ததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஆனந்தராஜ் என்ற மற்றொரு மாணவரும் காய்ச்சல் பாதிப்பால், அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து, அண்ணா பல்கலை வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் தலைமையில், நேற்று தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; 100 ஊழியர்கள் கொசு மருந்து தெளித்தல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உயிரிழந்த ஹரிஷ்குமாருக்கு ‘ஸ்கிரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாவரங்களில் வளரும் ஒருவகை உண்ணிப் பூச்சி கடிப்பதால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. இதையடுத்து, உண்ணிப் பூச்சிகளை ஒழிக்க மருந்து கலந்து செடிகளில் தெளிக்கப்பட்டது. வளாகம் முழுதும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் மற்றும் உடல்வலி உள்ள மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அண்ணா பல்கலையில் பொது சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சார்பில் சுகாதார முகாம் நடத்தப்பட்டது. இதில், 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. பலர் சுயமாக மருந்து சாப்பிட்டுள்ளதால், அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்புப் பணி நடந்து வருகிறது.600ஐ தாண்டும் பாதிப்புசென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினசரி 50க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் முன்பு மாதத்திற்கு 200க்கும் குறைவாக இருந்த பாதிப்பு, ஆகஸ்ட் மாதத்தில் 605 ஆகவும், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 614 ஆகவும் அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு இந்தாண்டு இறுதி வரை நீடிக்கலாம் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
* திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 80க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருகின்றனர். இன்று மட்டும் 70 பேர் வந்த நிலையில், ரத்தப் பரிசோதனையில் மூன்று பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தீவிர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு சிகிச்சைக்கு 20, தீவிர சிகிச்சைக்கு 30 படுக்கைகள் உள்ளன.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 95 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 350க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பை கண்டறிந்து, பணியாளர்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் 177 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்போரூர், காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஏடிஸ் கொசுவைக் கட்டுப்படுத்த 950 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எட்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
