“2026-27-ல் இந்தியாவின் நிலைமை என்ன….?” 180 விஞ்ஞானிகள் தொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை….!! 

Estimated read time 1 min read

2026-27-ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த ‘சூப்பர் எல் நினோ’ காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று இந்தியாவில் உள்ள 180-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வானிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது வழக்கமான எல் நினோவை விடப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தியாவின் காடுகள், ஆறுகள், கடல்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க அரசு முன்கூட்டியே கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று ‘செனோடோ’ தளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் இயல்பை விட அதிகமாக வெப்பமடைவதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இதன் காரணமாக இந்தியாவில் பருவமழை பொய்த்துப்போகவும், கடும் வறட்சி மற்றும் வெப்ப அலைகள் வீசவும் அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பாலைவனப் பகுதிகள், உயரமான மலைகள் மற்றும் நகரங்களில் நிலவும் கான்கிரீட் சூழலால் வெப்பத்தின் தாக்கம் மிக தீவிரமாக இருக்கும் எனக் கணித்துள்ளனர்.

மழைப்பொழிவு குறைவதால் ஏற்படும் குடிநீர் மற்றும் விவசாய நீர் பற்றாக்குறை, கிராமப்புறப் பொருளாதாரத்தையும் கால்நடை வளர்ப்பையும் கடுமையாகப் பாதிக்கும். மேலும், நிலவும் வறண்ட வானிலையால் காடுகளில் தீப்பற்றி பரவும் அபாயம் அதிகரிப்பதோடு, வனவிலங்குகளின் உணவு மற்றும் இனப்பெருக்க சுழற்சியும் பெரியளவில் பாதிக்கப்படும்.

நிலப்பரப்பைத் தாண்டி இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் கடலுக்குள் உள்ள பவளப்பாறைகள் வெளுத்துப்போய் அழியும் அபாயம் ஏற்படுவதுடன், மீன்களின் இருப்பிடமும் மாறும். இது மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள கடலோர மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் முடக்கும்.

எல் நினோவை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், அதிலிருந்து தப்பிக்க முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். இதற்காக உள்ளூர் அளவில் சிறிய வானிலை மையங்களை அமைத்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பதிவு செய்தல், செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடுகள் மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

You May Also Like

More From Author