ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

வளைகுடா துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து (Ras Tanura) சுமார் 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ஓமன் வழியாக சவூதி அரேபியா திருப்பிவிட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கு தடையின்றி கச்சா எண்ணெயை வழங்குவதற்காக இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

போர் தொடங்கியதில் இருந்தே உலகின் 25 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் போக்குவரத்தைக் கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக யேமெனில் உள்ள ஹெளதிகள் செங்கடலில் உள்ள பாப்-அல்-மண்டப் (Bab-al-Mandab) பகுதியில் உள்ள பெரிம் தீவு உட்பட பல பகுதிகளைக் கைப்பற்றிய நிலையில் மெக்கா உட்பட சவூதியின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ஹெளதிகளின் தாக்குதலால் சவூதி அரேபியாவின் செங்கடல் (Red Sea) துறைமுகமான யான்புவிற்கு கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்லும் முக்கிய கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடம் சேதம் அடைந்தது. இதையடுத்து அவ்வழித் தடத்தை சவூதி அரேபியா தற்காலிகமாக மூடியது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான சவூதியின் எரிபொருள் விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து ஒரு நாளைக்கு 5,77,000 பேரல்கள் கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன என்று சர்வதேச எரிசக்தி முகமை தனது மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவூதி கச்சா எண்ணெய் கிடைக்காததால், ஐரோப்பிய நாடுகள் நார்த் சீ (North Sea) மற்றும் நார்வே போன்ற மாற்று சந்தைகளில் இருந்து அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த விநியோகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ஐரோப்பாவிற்கு அவசரகால மூலோபாய எண்ணெய் இருப்புகளை (Strategic Oil Reserves) வெளியிடுமாறு பிரான்ஸ் அதிபர் மக்ரோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவாக வளைகுடா மற்றும் செங்கடல் ஏற்றுமதி மையங்களுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல இந்த உள்கட்டமைப்பையே சவூதி அரேபியா பயன்படுத்துகிறது.

சவூதி அரேபியாவின் செங்கடல் ஏற்றுமதி முனையமான ‘யான்பு’ (Yanbu) பகுதியில் ஏற்பட்ட உள்கட்டமைப்பு பாதிப்புகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவும் நெருக்கடிகள் காரணமாக ஓமன் வழியாக சுமார் 60 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயைத் திருப்பிவிடுவதற்கான அவசர முடிவை சவூதி அராம்கோ (Saudi Aramco) எடுத்துள்ளது.

சவூதியின் முக்கிய துறைமுகமான ராஸ் தனுராவிலிருந்து (Ras Tanura) கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய், ஓமனின் சோஹர் (Sohar) துறைமுகத்திற்கு அருகே கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றும் (Ship-to-Ship Transfers) முறை மூலம் திருப்பி விடப்படுகிறது.

இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய சந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், அடுத்த மாதத்திற்கான ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகங்களை முற்றிலுமாக சவூதி அராம்கோ ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு கைகொடுக்கும் வகையில், தனது நாட்டின் முக்கிய துறைமுகமான ‘சோஹர் துறைமுகத்தில்’ முதலீடு செய்யுமாறு இந்தியாவிற்கு ஓமன் அரசு நேரடி அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வாரம் ஓமன் தூதரகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாள் தொழில் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய சோஹர் பிரீசோன் தலைமை செயல் அதிகாரியும், துறைமுக துணைத் தலைவருமான ராயித் அல் ருபாயி இந்திய நிறுவனங்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியாவுக்கு துகம் மற்றும் சலாலா துறைமுகங்களை ஓமன் வழங்கியிருந்தாலும், சோஹர் துறைமுகம் அமைந்துள்ள புவியியல் அமைப்பு, இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான மாற்றாக அமையும் என சர்வதேச புவிசார் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author