சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 18ஆம் நாள் முற்பகல் ஷென்சென் நகரிலுள்ள சியன்ஹாய் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஏபெக் சிஇஓ உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், தற்போதைய சர்வதேச நிலைமை சிக்கலாகி மாறி வருகிறது. பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்திற்கு ஏற்ப ஏபெக் அமைப்பு நிறுவப்பட்டது. இவ்வாண்டு, ஏபெகின் தலைமை நாடாக சீனா 3ஆவது முறையாக பதவி ஏற்றுள்ளது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, நம்பிக்கையை வலுப்படுத்தி, உறுதிப்பாடு மற்றும் துணிவுடன் முன்னேறி, ஆசிய-பசிபிக் பொது சமூகத்தை கையோடு கை கோர்த்து கட்டமைத்து, இப்பிராந்திய கூட்டுச் செழுமையை ஊக்குவிக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
இதற்காக, அவர் 4 ஆலோசனைகளை வழங்கினார். முதலில், அமைதியான, நிலைத் தன்மையுடைய பொது நிலைமையைப் பேணிக்காக்க வேண்டும். இரண்டாவதாக, திறப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான மேடைகளை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, புத்தாக்கத்தின் மூலம் உந்து ஆற்றலை தூண்ட வேண்டும். 4ஆவதாக, பரஸ்பர நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுவதற்கான புதிய வழிகளை விரிவாக்க வேண்டும். விரிகுடா பகுதிப் பொருளாதார ஒத்துழைப்புக்கான உலகக் கூட்டணியை உருவாக்க சீனா ஆதரவளிக்கிறது. பல்வேறு விரிகுடா பகுதிகளுக்கிடையே பரிமாற்றங்களையும் தொடர்புகளையும் ஆழமாக்கி, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய வளர்ச்சிப் பாதையை ஆராய சீனா எதிர்பார்க்கின்றது என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டம், சொந்த வளர்ச்சி இலக்காகவும், ஆசிய-பசிபிக் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளின் பட்டியலாகவும், உலக தொழில் மற்றும் வணிக துறைக்கு சீனா அனுப்பியுள்ள ஒத்துழைப்புக்கான அழைப்பாகவும் திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.
ஆசிய-பசிபிக் பிரதேசம், எங்களுக்கு கூட்டு வளர்ச்சிக்கான முக்கிய இடமாகவும் கூட்டு ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் மேடையாகவும் விளங்குகிறது. நாம் கையோடு கை கோர்த்து பிரகாசமான ஆசிய-பசிபிக் எதிர்காலத்தைக் கூட்டாகப் படைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
