கிழக்கு சீனாவின் சேஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்ஸூ நகரில் இயங்கி வரும் ரோபோ பள்ளியில் இருந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலான பயிற்சிக்குப் பிறகு 4 ரோபோக்கள் வெற்றிகரமாகப் பட்டம் பெற்றுள்ளன.
பட்டம் பெற்ற இந்த நான்கு “மாணவர்களில்” இரண்டு வழிகாட்டி ரோபோக்கள், ஒரு ஆய்வு ரோபோ மற்றும் பியானோ வாசிக்கும் ஒரு ரோபோ ஆகியவை அடங்கும். ஹாங்க்ஸூ ரோபோ பள்ளியில் நடைபெற்ற பிரத்யேக பட்டமளிப்பு விழாவில் இவற்றிற்குப் பட்டயங்கள் வழங்கப்பட்டன.
பட்டம் பெற்றுள்ள இந்த நான்கு ரோபோக்களும் இனி தங்களது பணியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவற்றுக்கான பணி ஒதுக்கீடுகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளன.
இரண்டு வழிகாட்டி ரோபோக்கள் ‘சீன ஓவியத் தொடர் காப்பகம்’ மற்றும் ‘ஹாங்க்ஸூ ரோபோ பள்ளி’ ஆகியவற்றில் பணியாற்றவுள்ளன. ஆய்வு ரோபோ பயன்பாட்டிற்காகத் தியான்ஜின் நகரில் உள்ள நெஸ்ட்லே உற்பத்தி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது, அதே வேளையில் பியானோ வாசிக்கும் ரோபோ இசை நிகழ்ச்சிகளுக்காகத் தென் கொரியா செல்லவுள்ளது.
பள்ளியின் முதல்வர் சென் தியான்ஷெங், ஒவ்வொரு ரோபோவிற்கும் அடையாளக் குறியீடுகளை வழங்கி அவை பணிகளுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்தார். ரோபோக்களின் திறன் சான்றளிப்பு, பணி ஒதுக்கீடு மற்றும் நீண்டகால நிர்வாகத்திற்காகத் தனித்துவமான அடையாளக் குறியீட்டு முறையை இந்தப் பள்ளி உருவாக்கியுள்ளது.
