உலக அளவில் முதியவர்களின் தலைநகரமாக மாறும் சீனா

Estimated read time 1 min read

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூகக் கட்டமைப்பிற்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, வரும் 2035ஆம் ஆண்டுக்குள் பீஜிங் நகரம் ஒரு ‘சூப்பர்-ஏஜ்ட்’ எனப்படும் அதீத முதியவர்களைக் கொண்ட நகரமாக முழுமையாக மாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2035ஆம் ஆண்டுக்குள் பீஜிங்கின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 33 சதவீதத்திற்கும் அதிகமானோர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களாக இருப்பார்கள். பொதுவாக, ஒரு நகரில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 30 சதவீதத்தைக் கடக்கும் போது அது ‘சூப்பர்-ஏஜ்ட்’ என வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், 2035க்குள் பீஜிங்கில் மட்டும் முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 70 லட்சத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ ‘பீஜிங் டெய்லி’ நாளிதழின் அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி பீஜிங்கில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 52.9 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த நகரின் மக்கள் தொகையில் சுமார் 24.3 சதவீதமாகும். முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்துவது, ’15-நிமிட பராமரிப்பு சேவை வலையமைப்பு’ மற்றும் உணவு உதவி மையங்கள் போன்ற நலத்திட்டங்களை நிர்வாகம் உருவாக்கி வருகிறது.

மறுபுறம், சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க இந்த ஆண்டு மட்டும் அரசு சுமார் 180 பில்லியன் யுவான் (26.92 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சீனாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுருங்கத் தொடங்கியுள்ளது. இதனுடன் சேர்த்து வேலை செய்யும் உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவது, நாட்டின் ஓய்வூதிய நிதி மற்றும் சுகாதாரத் துறை மீதான அழுத்தத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் குடும்பங்களின் எண்ணிக்கையும் நுகர்வும் குறைவது சீனாவின் ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author