இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தாகி 66 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தெற்காசியாவின் மிக முக்கிய நீர் பகிர்வு ஒப்பந்தமாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் கடுமையான புவிசார் அரசியல் சவால்களைச் சந்தித்து வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ம் தேதி கராச்சியில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இரண்டு பகை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் என்று உலகளவில் பேசப்பட்டது.
உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம், இரு நாடுகளும் சிந்து நதி படுகையின் ஆறு நதிகளின் நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி, ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முதன்மையாக உரிமைகள் உள்ளன. வெறும் 20 சதவீத பங்குள்ள இந்த நதிகளின் நீரை இந்தியா கட்டுப்பாடின்றி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிந்து நதி படுகையின் மொத்த நீரோட்டத்தில் ஐந்தில் நான்கு பங்கு மேற்கு நதிகளிலிருந்து வரும் நிலையில் 80 சதவீத பங்குடைய சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டன.
இந்த மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டாலும், விவசாயம் நீர் மின் திட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தேவைகளுக்காக தனது எல்லையில் மேற்கு நதிகளின் நீரைப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியும் முழு அதிகாரமும் வழங்கப் பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், தகவல் பரிமாற்றம், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தகராறு தீர்வு ஆகியவற்றிற்கான ஒரு முறையான வழிமுறையாக நிரந்தர சிந்து ஆணையத்தையும் நிறுவியது.
1965 மற்றும் 1971 போர்கள் மற்றும் 1999 கார்கில் மோதலின் போதும் இந்தியா இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. முழு அளவிலான போரின் போதும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மதித்து வந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது.
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று கூறிய பாரதப் பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் படும் என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் தனது ஒட்டுமொத்த நன்னீர் தேவைக்கும், கோதுமை, அரிசி, பருத்தி உள்ளிட்ட நாட்டின் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பயிர்களின் உற்பத்திக்கும் மற்ற விவசாயத் தேவைகளுக்கும் சிந்து நதியை மட்டுமே முழுமையாக நம்பியுள்ளது. இதனால் சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து பாகிஸ்தானை நேரடியாக கடுமையாக பாதித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு விவசாயத்தை நம்பியுள்ள பாகிஸ்தானின் தண்ணீர் பிரச்சனைக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து காரணமில்லை. மாறாக சிந்து நதி நீரைச் சேகரித்து, சேமித்து, விநியோகிக்கும் திறன் இல்லாததே காரணம் ஆகும்.
சொல்லப்போனால் சிந்து நதிநீரில் வெறும் 30 நாட்கள் பயன்படுத்தக்கூடிய அளவுக்கான நீரை மட்டுமே அந்நாட்டால் சேமித்து வைக்க முடிகிறது. போதிய அணைகளும் நீர் மேலாண்மைத் திட்டங்களும் இல்லாத காரணத்தால் கனமழை காலங்களில், பெரும் அளவிலான நீர் படுகையின் வழியாகப் பாய்ந்து இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளதால் பல முக்கிய நகரங்களில் பொது நீர் விநியோகம் முடங்கி மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் இந்தியாவின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து நடவடிக்கையை நீர் பயங்கரவாதம் என்றும், பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல் என்றும் உலக அரங்கில் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா தன்னிச்சையாக ஒப்பந்தத்தை நிறுத்தியதை எதிர்த்து சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முறையிட்டாலும், இந்தியா அதனை ஏற்க மறுத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது
ஹேக்கை தலைமையிடமாகக் கொண்ட நடுவர் நீதிமன்றம் ‘சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது’ என்று அறிவித்துள்ள இந்தியா அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவும், அதன் முடிவுகளை அங்கீகரிக்கவும் மறுத்துள்ளது.
இதன் மூலம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நடுவர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் அல்லது முடிவுகள் நடைமுறையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையை இந்தியா உருவாக்கியுள்ளது.
1960-ல் பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்ட பொருளாதார, மக்கள்தொகை மற்றும் காலநிலைச் சூழலில் தொடர்ந்து செயல்படக்கூடியதாக இருக்குமா என்பதே இப்போதைய கேள்வி.
