மிஸ் யுனிவர்ஸ் 2026 பட்டம் வென்றார் ஜெனிபர் பாரெட்டோ..!

Estimated read time 1 min read

2026-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ (பிரபஞ்ச அழகி) பட்டத்தை புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ வென்றுள்ளார்.

புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலாட் கொலிசியத்தில் நடைபெற்ற 75-வது சர்வதேச அழகுப் போட்டியின் இறுதிச் சுற்றில் அவர் இந்தப் புகழ்பெற்ற மகுடத்தைச் சூடினார்.

116 போட்டியாளர்கள் பங்கேற்ற பல வார காலப் போட்டிகள், தனித்திறமை வெளிப்பாடுகள் மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, சிறப்புப் பதிப்பு மகுடம் புதிய பிரபஞ்ச அழகியின் தலையை அலங்கரித்துள்ளது.

இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் 75-வது ஆண்டு விழா என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக, மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நவம்பர் மாத தொடக்கத்தில் ‘தி ரேடியன்ஸ் ஆஃப் அன் எடர்னல் லெகசி’ என்ற புதிய மகுடத்தை அறிமுகப்படுத்தியது. நகை வடிவமைப்பாளர் ஜார்ஜ் விட்டல்ஸ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ‘மைசன் டி’ஓர்’ நகை நிறுவனம் இணைந்து வடிவமைத்த இந்த மகுடத்தில், 18 காரட் வெள்ளைத் தங்கத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கேரளாவைச் சேர்ந்த 19 வயதான கசியா லிஸ் மெஜோ பங்கேற்றார். முதல் 30 இடங்களுக்குள் முன்னேறி அசத்திய அவர், நீச்சலுடைச் சுற்றுக்குப் பிறகு முதல் 12 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பைத் தவறவிட்டார். மாடலிங் மற்றும் சட்டக் கல்லூரி மாணவியான மெஜோ, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்ற முதல் கேரளப் பெண் என்ற வரலாறு படைத்தார். மேலும், மிக இளம் வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் கேரளா’ பட்டம் வென்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 2024-ஆம் ஆண்டு ‘மிஸ் டீன் திவா’ பட்டம் வென்றதன் மூலம் தனது அழகுப் போட்டிப் பயணத்தைத் தொடங்கிய அவர், 2025 ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல்’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.

இதுவரை இந்தியா சார்பில் 1994-ல் சுஷ்மிதா சென், 2000-ல் லாரா தத்தா மற்றும் 2021-ல் ஹர்னாஸ் சந்து ஆகியோர் மூன்று முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற 2026 மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டியைத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் மரியோ லோபஸ் மற்றும் 2022-ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் ஆர்’போனி கேப்ரியல் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author