தங்கத்தின் போக்கை மாற்றப் போகும் அந்த 3 முக்கியத் தேதிகள்….!! 

Estimated read time 1 min read

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை, நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து சுமார் 31.7 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து, கடந்த 16 நாட்களில் மட்டும் சவரனுக்கு 15,360 ரூபாய் வரை குறைந்திருந்தது. ஆனால், நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகக் கடந்த இரண்டு நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் 93,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் இப்போதே நகை வாங்குவதா அல்லது விலை குறையும் வரை காத்திருப்பதா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ள நிலையில், நவம்பர் 25, டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 9 ஆகிய மூன்று முக்கியத் தேதிகளே தங்கத்தின் அடுத்தகட்ட போக்கைத் தீர்மானிக்கப் போகின்றன எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று (நவம்பர் 25) அமெரிக்க மத்திய வங்கி மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும் பணவீக்க அறிக்கை வெளியாக உள்ளது. அமெரிக்காவின் உண்மையான விலைவாசி அழுத்தத்தைக் காட்டும் இந்த அறிக்கையில் பணவீக்கம் அதிகமாக இருந்தால், வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. வங்கி வைப்பு நிதியைப் போலத் தங்கம் வட்டி தராது என்பதால், வட்டி விகிதம் உயரும்போது தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்புக் குறைந்து அதன் விலை மேலும் சரியக்கூடும்.

அடுத்ததாக, வரும் டிசம்பர் 4-ம் தேதி அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தை நிலவரம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் வலுவாக இருந்தால் டாலர் மதிப்பு உயர்ந்து, வட்டி விகிதக் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. மாறாக, வேலைவாய்ப்புகள் குறைந்திருந்தால் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் தொடர்ந்து, வரும் டிசம்பர் 9-ம் தேதி அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது. வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்துவதற்கான வாய்ப்பு 96 சதவீதம் வரை உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று வெளியாகும் அறிவிப்புகளே சர்வதேச அளவில் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக அமையும்.

இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேசச் சந்தை நிலவரம், ரூபாய் – டாலர் மதிப்பு, இறக்குமதி வரி மற்றும் அமெரிக்கா – ஈரான் போர்ப் பதற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே மாறுபடுகிறது. எனவே, தற்போதைய விலையே குறைந்தபட்ச விலை என நினைத்து அவசரப்படாமல், இந்த மூன்று முக்கியத் தேதிகளில் வெளியாகும் பொருளாதார முடிவுகளைக் கவனித்து, நிபுணர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வதே புத்திசாலித்தனமாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author