சிவாலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைகள் என்னென்ன?

Estimated read time 0 min read

சைவ சமயக் கோவில்களில் ஆகம முறைப்படி தினம் நடைபெறுகின்ற ஆறு கால பூஜைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. உஷத்கால பூஜை (அதிகாலை பூஜை)

முதல் பூஜையான இது, சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் தொடங்கி, சூரிய உதயம் வரை உள்ள காலத்தில் (அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை) இந்த பூஜையை நடத்தவேண்டும் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்).

இந்தப் பூஜையின் போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார். பின்பு உற்சவர் சிலையை மட்டும் மேள வாத்தியத்துடன் கோவிலை வலம் வரச் செய்து மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூஜை நடைபெறும். உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்கு செல்வதாக நம்பிக்கை. இந்தப் பூஜை அபிஷேக ஆராதனையோடு முடிவடைகிறது.

2. காலசந்தி பூஜை

ஆகமத்தின்படி காலசந்தி பூஜையானது, சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் (காலை 6 மணி முதல் 10 மணி வரை காலை சந்தி) நடைபெற வேண்டும். பொதுவாக காலை 8:00 மணி முதல் காலை 9:00 மணிக்குள் பெரும்பாலான கோவில்களில் காலசந்தி பூஜை நடத்தப்படுகிறது. பூஜையின் போது சூரியன், விநாயகர், துவாரபாலகர்களுக்கு பூஜை நடைபெறுகிறது. பின்பு மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூஜை முடிவடைகிறது.

3. உச்சிக்கால பூஜை

இப்பூஜை நண்பகலில் நடத்தப்படுகிறது. சூரியன் உச்சத்தில் இருக்கும் காலம் அதாவது, மதியம் 11.30 முதல் 12.30 வரை உள்ள காலம் உச்சி காலம் ஆகும். விநாயகர் பூஜை, துவாரபாலகர் பூஜை செய்தபின், மூலவர் லிங்கத்திற்கு அலங்காரம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்தப் பூஜைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டிகேஸ்வரரிடம் வைத்து வழிபடப்படுகிறது.

4. சாயரட்சை பூஜை (சாயங்கால பூஜை)

இந்தப் பூஜையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் தொடங்கி சூரியன் மறைவதற்குள் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூசை, மூலவரான லிங்கத்திற்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

5. சாயரட்சை இரண்டாம் கால பூஜை (ராக்கால பூஜை)

இந்த பூஜையானது சாயங்கால பூஜைக்குப்பின்னர் 1.30 மணி நேரம் கழித்து இரவின் துவக்கத்தில் நிகழ்த்தும் பூஜையாகும். விநாயகர் பூசை, மூலவருக்கு அபிசேக, ஆராதனை, தீபம், நைவேத்தியப் படையல் பூஜை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூஜை நடைபெற்று சண்டிகேஸ்வர பூசையுடன் இரண்டாம் கால பூஜை முடிவடைகிறது.

6. அர்த்தசாம பூஜை

இப்பூஜை இரவு 7.30 முதல் 9 மணி வரை நடைபெறும். மூலவருக்கு அபிசேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகளை பள்ளியறைக்கு எடுத்துச் சென்று, அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதை பள்ளியறை பூஜை எனறும் சொல்வதுண்டு. பள்ளியறை பூஜை முடிந்ததும் சண்டிகேஸ்வரருக்கு பூஜை நடைபெறுகிறது. பின்பு பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூஜை நடைபெறுகிறது. அத்துடன் அர்த்தசாம பூஜை முடிவடைகிறது.

ஆகம விதிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோவில்களில், இந்த விதிகளின்படியே பூஜைகள் நடத்தப்படவேண்டும். கால நேரம், இறைவனுக்கு நைவேத்யம், அர்ச்சனைக்குரிய பூக்கள், அபிஷேக திரவியங்கள் என அனைத்துமே ஆகமங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேளை பூஜை நடக்கும் போதும் கர்ப்ப கிரஹத்தில் விக்ரகத்தின் பழைய அலங்காரங்களை எடுத்துவிட்டு, அபிஷேகம் செய்து வேறு வஸ்திரம் அணிவித்து பிறகு நைவேத்தியம் செய்வார்கள். பிறகு தீபாராதனை நடைபெறும். பெரிய ஆலங்களில் தீபாராதனையில் ஷோடசோபசாரங்கள் நடைபெறும். இவை நடக்கும்போது பல வகை வாத்தியங்கள் முழங்கும்.

You May Also Like

More From Author