ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்தியா முன்வைத்துள்ள போர் நிறுத்த முன்மொழிவை (Ceasefire Proposal) பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் அமைதி முயற்சியாகப் பார்க்கப்படும் இத்திட்டம் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். போரை நிறுத்த சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் வேளையில், இந்தியாவின் தலையீடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக இந்தியா, துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 4 முக்கிய நாடுகளிடம் இருந்து அமைதித் திட்ட முன்மொழிவுகள் தங்களுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதில் மற்ற நாடுகளின் திட்டங்களைக் காட்டிலும் இந்தியாவின் முன்மொழிவு மிகவும் விரிவானதாகவும் (Detailed and Comprehensive), நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் அமைந்துள்ளது என்று அவர் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், குறிப்பாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் (Energy Sector) மற்றும் முக்கியக் வர்த்தகப் பாதையான கருங்கடல் பகுதிகளில் (Black Sea Region) உடனடியாகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக இந்தியாவின் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை உக்ரைன் தீவிரமாகப் பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அமைதிக்கான இந்தியப் பிரதமரின் ராஜதந்திர முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படும் இந்த நகர்வு, உலக நாடுகளிடையேயும் சர்வதேசக் கராஜதந்திர வட்டாரத்திலும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
