Views: 3
திரைப்படம் மூலமாக அரசியல் கருத்துகளைச் சொல்வதென்பது தமிழ்த் திரையுலகில் ‘தியாகபூமி’க்கு முன்பே தொடங்கிவிட்டது.
இந்திய நாட்டில் சுதந்திரம் வேண்டுமென்பதையும் சமத்துவம் வேண்டுமென்பதையும் அத்திரைப்படங்கள் பேசின.
ஆனால், தியேட்டரில் கூடியிருக்கும் மக்களை நோக்கி நேரடியாகக் கேள்விகள் எழுப்பவில்லை; சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் காரணம் என்று குற்றம் சாட்டவில்லை.
புதிய பூமி விரைவில் உருவாகும் என்று சூளுரைக்கவில்லை; வறுமையையும் வேதனையையும் போக்க மாற்றங்களை நாமே உருவாக்க வேண்டும் என்று புரட்சி பேசவில்லை.
கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘பராசக்தி’ இவற்றையெல்லாம் மிகச்சிறப்பாகத் தொடங்கி வைத்தது.
இதற்கு முன்பே அவர் ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘அபிமன்யூ’ உட்படப் பல படங்களுக்கு வசனம் எழுதியிருந்தாலும், அவை அனைத்தும் அரச கதைகளாக அமைந்தன.
சமகாலச் சமூக வாழ்க்கையைப் பிரதிபலித்த காரணத்தால், ஒரு படி மேலானதாக அமைந்தது ‘பராசக்தி’.
அதற்கேற்ப கனல் தெறிக்கும் வசனங்கள் கருணாநிதியின் பேனாவில் இருந்து உமிழப்பட்டன.
67 ஆண்டுகள் ஆனபின்னும் இப்படத்தைக் கொண்டாட அதுவே வகை செய்திருக்கிறது. ஆனாலும், இதைவிட மேலும் சிறப்பானதொரு அம்சம் அப்படத்துக்கு உண்டு.
சிவாஜி என்றொரு மாபெரும் கலைஞனைத் தமிழ் திரையுலகில் வி.சி.கணேசன் என்ற பெயரில் அறிமுகப்படுத்திய திரைப்படம் ‘பராசக்தி’.
இப்படத்தினால் அடையாளம் பெற்ற சிவாஜி, பின்னாளில் தன் மூலமாக இப்படத்துக்கு அடையாளத்தை உருவாக்கியது அவரது வாழ்நாள் சாதனை.
ஒரே படத்தில் பல்வேறு அடுக்குகளுடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு எந்தவொரு நடிகருக்கும் சாதாரணமாகக் கிடைத்துவிடாது.
அதற்கேற்ப, பாவலர் பாலசுந்தரம் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரான ‘பராசக்தி’, சிவாஜியின் நடிப்புத் திறனுக்கான ஊற்றுக்கண்ணாக அமைந்தது.
1939-45 களில் நிகழ்ந்த இரண்டாம் உலகப்போரால் நேரடியாகத் தமிழகம் பாதிக்கப்படவில்லை. ஆனால், பெருமளவிலான குடும்பங்களின் வாழ்க்கை அடியோடு மாறிப்போனது.
உயிர் பயத்தில் இடம்பெயர்ந்தோரும், உடைமைகளை இழந்தோரும், கடனில் சிக்கித் தவித்தோரும் ஏராளம். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.
‘பராசக்தி’ கதை :
பிழைப்புக்காக பர்மா சென்ற மூன்று சகோதரர்கள் தாய்நாடு திரும்ப நேர்கையில் தாங்கள் சேர்த்த செல்வங்களை இழக்க நேர்வதில் இருந்து படம் தொடங்குகிறது.
சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் ஆகிய 3 சகோதரர்களும் பர்மாவில் வசிக்கின்றனர். சட்டம் படித்த சந்திரசேகரன் மனைவியுடன் புகழ் வாழ்க்கை வாழ்கிறார்.
ஞானசேகரன் வணிகமொன்றில் ஈடுபட, கடைசி சகோதரரான குணசேகரன் செல்வச்செழிப்புடன் வளர்ந்து வருகிறார். மதுரையில் இவர்களது சகோதரி கல்யாணி, தந்தை மாணிக்கம் பிள்ளையோடு வசிக்கிறார்.
சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டுப் பிரிந்த 3 சகோதரர்களும், கல்யாணியின் திருமணத்துக்குச் செல்ல வேண்டுமென்று துடிக்கின்றனர். ஆனால், இரண்டாம் உலகப் போரின் காரணமாக கப்பலில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது.
நீண்டகாலப் பயணத்திற்குப் பின்னர் குணசேகரன் சென்னைக்கு வருகிறார். அதற்குள் பர்மாவில் குண்டுமழை பொழிகிறது. உயிர் தப்பினால் போதுமென்று சந்திரசேகரன், அவரது மனைவி, ஞானசேகரன் நடந்தே இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிடுகின்றனர்.
திடீரென்று குண்டுமழையில் சிக்கி ஞானசேகரன் மாயமாகிறார். மனைவியுடன் அகதியாக இந்தியா வரும் சந்திரசேகரன், மீண்டும் நீதிபதி பதவியை அடைகிறார்.
அதே நேரத்தில் கல்யாணி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறார். அதை அறியும் முன்னரே அவரது கணவன் இறக்க, அதைப் பார்த்து மாணிக்கமும் மரணமடைகிறார்.
மதுரைக்கு வரும் வழியில், ஒரு பெண்ணின் சூழ்ச்சியினால் தன் பணத்தையெல்லாம் இழக்கிறார் குணசேகரன். பைத்தியக்காரனாக நடித்து ஏமாற்றும் அவர், நிர்க்கதியான கல்யாணியைக் காப்பாற்றத் துடிக்கிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் தங்கள் வாழ்வில் சந்தித்த இன்னல்கள் என்னென்ன? சமூகத்தில் நிலவும் கொடுமைகளைத் தாண்டி அவர்கள் எவ்வாறு ஒன்று சேர்ந்தனர் என்பதுடன் படம் முடிவடைகிறது.
புராண இதிகாசங்களையும் கற்பனையான அரச கதைகளையும் மையமாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட காலமது. எனவே, ‘பராசக்தி’ என்றவுடன் பக்திப்படம் என்றே பலரும் நினைத்தனர்.
அதற்கு மாறாக, மூடநம்பிக்கைகளையும் பக்தி குறித்த கற்பிதங்களையும் சாடுவதாக அமைந்திருந்தது திரைக்கதை. இதனால், படத்தின் தலைப்பு இந்து மத நம்பிக்கைகளைச் சீர்குலைக்கிறது என்று எதிர்ப்பு எழுந்தது.
அது மட்டுமல்லாமல், ஒரு குடும்பச் சித்திரத்தின் நடுவே திராவிட இயக்கக் கருத்துகளைப் புகுத்திய விதத்தில் திரைக்கதை மற்றும் வசனத்தில் வித்தியாசத்தை உருவாக்கினார் கருணாநிதி. இதுவும் பத்திரிகைகள், தினசரிகள் சிலவற்றில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
குணசேகரனைக் காப்பாற்றும் விமலா, “உனக்குத் தெரியாமல் சமூகத்தோடு சேர்ந்து முட்டாள் ஆகியிருக்கிறாய்… நீ ஒரு சுயநலவாதி,
உன் சொந்த தங்கைக்காக, அவள் வாழ்வுக்காகச் சுருண்டு போனாயே தவிர நாட்டில் எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என்று நினைத்தாவது பார்த்தாயா, அதற்காக உன் நாவு அசைந்ததுண்டா, நெஞ்சு துடித்ததுண்டா” என்று கேள்வி எழுப்புவார்.
“உன்னை ஏமாற்றிய நாடோடியைப் பாராட்டுகிறேன். நீ ஏழையாக ஆக்கப்படாவிட்டால் ஏழைகள் உலகத்தை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டாய், அப்படி ஒரு உலகம் இருப்பதாகவே உனக்குத் தெரியாது” என்று கூறித் திகைக்க வைப்பார்.
‘பிராணநாதா’ என்று பணிவோடு பெண் பாத்திரங்கள் வசனம் பேசிய காலத்தில், இந்த பாத்திரப் படைப்பும் வசனம் பேசும் வாய்ப்பும் நிச்சயம் புதுமையானதுதான்.
“சமுதாயப் புரட்சி ஆலகால விருட்சத்தின் கிளையை வெட்டுவதல்ல; அதன் ஆணிவேரையே பெயர்ப்பதுதான்” என்பது போன்ற வசனங்கள்தான் மு.க.வை ரசிகர்கள் மனதில் நிலைபெற வைத்தது.
இந்தக் காட்சியின்போது தனக்கு இவ்வாறு பேசக் கற்றுக்கொடுத்தது அண்ணா என்றும், தனது தந்தை ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்றிருப்பார் எனவும் விமலா கூறுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.
காங்கிரஸை எதிர்த்து திராவிடர் கழகம் முன்னிறுத்தப்பட்ட நேரத்தில், அதில் முக்கியத் தலைவராக விளங்கிய கருணாநிதி எந்த நோக்கத்தில் இந்த வசனத்தை எழுதினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அதற்கேற்ப, தியேட்டரில் ரசிகர்களும் இக்காட்சியில் ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
கணவனையும் தந்தையும் இழந்து கைக்குழந்தையுடன் வாழும் கல்யாணியைப் பார்த்து, இட்லிக்கடை வைப்பதுதான் பிழைப்பதற்கான வழி என்று ஒரு பெண்மணி சொல்வார்.
கல்யாணி அதனைத் தரக்குறைவாக நினைக்க, ‘தாலியறுத்தவருக்கெல்லாம் அது தானேம்மா தாசில் உத்தியோகம்’ என்பார் அந்தப் பெண்.
இது அந்த காலத்தில் இருந்த கைம்பெண்களின் நிலையை அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
நீதிபதியாக இருக்கும் சந்திரசேகரின் வீட்டில் விருந்து நடக்கிறது என்று தெரிந்து குழந்தையுடன் உள்ளே நுழைவார் கல்யாணி. ‘அப்புறம் வா’ என்று சந்திரசேகர் சொல்ல, கல்யாணி ‘குழந்தை அழுகிறது’ என்பார்.
வாக்குவாதம் உயர காலைப் பிடித்துக் கெஞ்சியும் அங்கிருந்து கல்மனதுடன் அகன்று விடுவார் சந்திரசேகரன்.
உறவுகளை இழந்தாலும் ஒரு மனிதன் அதேபோன்ற நிலையிலிருக்கும் பிற மனிதர்களைக் கண்டு மனம் இரங்குவதில்லை என்று திரைக்கதையில் வெளிப்படுத்தியிருப்பார் கருணாநிதி. அந்த பாத்திரம் நல்லவன் தான் என்று நியாயப்படுத்த முயன்றிருக்கமாட்டார்.
அது மட்டுமல்லாமல், எம்.சி.சேகர் என்றே சந்திரசேகரன் வீட்டின் முன் பலகை வைக்கப்பட்டிருக்கும்.
சந்திரசேகரன் என்ற பெயரைப் பார்த்ததும் தன் சகோதரர் என்ற எண்ணம் கல்யாணியின் மனதில் எழுந்துவிடாதா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் விதத்தில், அந்த இடத்தைப் புத்திசாலித்தனமாகக் கடந்திருப்பார் கருணாநிதி.
நீதிமன்றக் காட்சியில் ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என்று சிவாஜி வசனம் பேசும் காட்சி இப்போதும் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும்.
பின்னாட்களில் விவேக் இதனை ஸ்ஃபூப் செய்து ‘பெரியபாளையத்தம்மன்’ திரைப்பட காமெடியும் பெரிய வெற்றியைப் பெற்றது.
கருணாநிதியின் வசனங்களில் சமத்துவமும் புரட்சியும் மட்டுமல்ல எள்ளலும் அதிகம் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம்.
சாலையோரமாகப் படுத்திருக்கும் சிவாஜியை ஒரு கான்ஸ்டபிள் எழுப்பும் காட்சியில், ‘நீ பிக்பாக்கெட்தானே’ என்றவுடன், ‘இல்ல எம்ப்டி பாக்கெட்’ என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்துக் காண்பிப்பார் சிவாஜி.
‘ஏண்டா முழிக்கிற’ என்றவுடன், ‘தூங்குறவனை எழுப்புனா முழிக்காம என்ன பண்ணுவான்’ என்று பதிலளிப்பார். இதுபோன்ற வசனங்கள் அக்காலப் படங்களில் இருந்து பராசக்தியை வேறுபடுத்தியது.
1952 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ‘பராசக்தி’ வெளியானது. புரட்சிகரமான கருத்துகளைக் கொண்ட வசனங்களும், அதனை சிவாஜி உச்சரித்த பாங்கும் ரசிகர்களைக் கொண்டாட வைத்தன.
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிரான கருத்துகளை இப்படம் கொண்டிருந்ததாக எதிர்ப்புகள் எழுந்தன.
திராவிட நாடு கொள்கையை உரக்கப் பேசுவதாகவும், கிளர்ச்சியை உண்டுபண்ணும் விதமாக இருப்பதாகவும், கோயில் குறித்த மக்களின் நம்பிக்கைகள் மீது கேள்வியெழுப்புவதாகவும் விமர்சனங்கள் வெளியாகின.
இதனால் படம் தடை செய்யப்படலாம் என்று வதந்தி வேகமாகப் பரவியது.
மத்திய உள்துறை, தகவல் ஒலிபரப்புத் துறை வரை இந்த விஷயம் சென்று, படத்தை உளவுத்துறை போலீசார் பார்த்து ரிப்போர்ட் சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது.
தணிக்கைத் துறையின் அனுமதியை மீறி 3 காட்சிகள் படத்தில் சேர்க்கப்பட்டதாக ஆட்சேபணை கிளம்ப, உடனே அவற்றை நீக்கிவிடுவதாக வாக்குறுதி அளித்தார் தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்.
இந்த சர்ச்சைகளே ‘படம் ஒரு வாரம் ஓடுமா’ என்றிருந்த நிலையை மாற்றிப் பல தியேட்டர்களில் 175 நாட்கள் கடக்கத் துணை செய்தது.
‘சந்திரலேகா’ உட்படப் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் அறிமுகமாகியிருக்க வேண்டியவர் சிவாஜி.
பல்வேறு காரணங்களாலும், சினிமாவுலகில் நிலவிய குயுக்திகளாலும் அந்த வாய்ப்புகள் எல்லாம் பறிபோயின.
அவை எல்லாமே நல்லதுக்குதான் என்பதுபோல, மிகப்பெரிய அறிமுகத்தைப் பராசக்தியில் பெற்றார் சிவாஜி.
முதல் படத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி, இந்தியாவில் வேறெந்த மொழியிலும் வேறெந்த நடிகரும் பெறவில்லை.
அதனை மீறி வெற்றி பெற்றவர்களும் ‘ஒன் டைம் ஒண்டர்’ என்ற அளவில் ஒதுங்கிக்கொண்டனர்.
பராசக்திக்காக மாதம் 250 ரூபாய் சம்பளம் பெற்றார் சிவாஜி. ஆனாலும், படம் வெளியாகும் வரை தான் நாயகனாகத் தொடருவோமா என்ற சந்தேகம் அவரிடம் நிறைந்திருந்தது.
பெருமாள் முதலியார் இப்படத்தைத் தயாரித்தாலும், ஏவி.எம் மெய்யப்பச் செட்டியார்தான் இப்படத்துக்கு நிதியுதவி செய்தார். இதனால் ஏவி.எம் ஸ்டூடியோவில்தான் படம் தயாரானது.
சில ஆயிரம் அடிகள் எடுக்கப்பட்ட நிலையில் ப்ராசஸ் செய்து பார்த்த மெய்யப்பச் செட்டியார், சிவாஜியின் தோற்றம் கண்டு முகம் சுளித்தார்.
ஒல்லியான உடல்வாகு, ஒடுக்கு விழுந்த கன்னம், சுருளான தலைமுடி, நாடகத்தில் பெண் வேடங்களையே அதிகமாக ஏற்று நடித்த அனுபவம் என்று எல்லாமுமாகச் சேர்ந்து, சிவாஜியைப் பற்றிய தவறான அனுமானத்தை அவர் மனதில் ஏற்படுத்தியது.
மெய்யப்பச் செட்டியாரின் அவநம்பிக்கை வலிமையாக இருந்தபோதிலும், சிவாஜி இல்லையென்றால் படத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்தார் பெருமாள் முதலியார். ஏவி.எம்மின் நிதியுதவி இல்லாமலேயே படத்தைத் தொடர முடிவு செய்தார்.
இந்த பிடிவாதத்தினால் தனது முடிவைக் கைவிட்டார் மெய்யப்பச் செட்டியார்.
அந்த நாட்களை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்த சிவாஜி, “ஏவி.எம் ஸ்டூடியோவில் இருக்கும் மரங்கள் தனது கண்ணீரால் வளர்ந்தன” என்று பின்னாளில் குறிப்பிட்டார்.
மெய்யப்பச் செட்டியாரின் கருத்தைப் பொய்யாக்குவதற்காக, சிவாஜிக்கு அசைவ உணவுகள், தேகப்பயிற்சிகள் கொடுத்து அவரது தோற்றத்தை மாற்ற ஏற்பாடுகள் செய்தார் பெருமாள் முதலியார். அதன்பின்னர், பல காட்சிகள் இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சுவால் மீண்டும் படமாக்கப்பட்டன.
1940-களில் நாடகத் துறையில் நுழைந்த சிவாஜி ஆரம்பகாலத்தில் மிகக்கொடுமையான அனுபவங்களைச் சந்தித்தார். அதுநாள் வரை கிரகண நேரத்து இருள் போலிருந்த அவரது வாழ்வு, பெருமாள் முதலியாரால் வெளிச்சக் கடலில் திளைத்தது.
அந்த நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காக, ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் குடும்பத்துடன் சென்று வேலூரில் இருந்த பெருமாள் முதலியாரைக் கண்டு ஆசி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சிவாஜி.
இந்த வழக்கம் பெருமாள் முதலியார், சிவாஜி கணேசன் என்ற இருவரோடு மட்டும் முடிந்துவிடவில்லை.
இப்போதும் பெருமாள் முதலியாரின் வாரிசுகளைப் பார்த்து அந்த மரியாதையைத் தொடர்ந்து வருகின்றனர் அன்னை இல்ல வாரிசுகள்.
‘பராசக்தி’க்கு முன்னும் பின்னும் சிவாஜியின் வாழ்க்கை எவ்வாறாக அமைந்தது என்பதை இதுவே புடம் போட்டு விளக்கிவிடும்.
ஸ்ரீரஞ்சனி இட்லி எடுப்பதற்காகச் செல்லும்போது, அவர் தான் தன் தங்கை என்று சொல்லமுடியாமல் தவிக்கும் மனநிலையை சிவாஜி வெளிப்படுத்துமிடம் ஒன்று போதும் அவரது நடிப்புத்திறன் என்னவென்பதை ரசிகர்கள் அறிந்துகொள்ள..
செல்வச்செழிப்பில் திளைப்பதையும், வறுமையில் வாடுவதையும் உடல்மொழியிலேயே வெளிக்காட்டிய சிவாஜி, அடுத்தடுத்த படங்களில் தான் சிகரம் தொடப்போகிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்தியிருப்பார். அதை உணர்ந்த அந்தக்கால ரசிகர்களும் அதற்குரிய மரியாதையைத் தந்தனர்.
சிவாஜி மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, வி.கே.ராமசாமி ஆகியோருக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது ‘பராசக்தி’.
அந்த காலகட்டத்தில் ஆண்களை எதிர்த்துப் பேசும் பெண் பாத்திரங்கள் மிகக்குறைவாகவே உருவாக்கப்பட்டன. அப்படியே இருந்தாலும், அவை எதிர்மறை பாத்திரங்களாகவே இருந்தன.
கல்யாணியை அடைய நினைக்கும் கோடீஸ்வரர் நாராயண பிள்ளையின் மனைவி, அவரைப் பார்த்து ‘நீயெல்லாம் ஒரு மனுஷனா’ என்று கேள்வி கேட்பார். இந்த வேடத்தில் டி.பி.முத்துலட்சுமி நடித்திருப்பார்.
சந்திரசேகரனின் மனைவியாக வரும் சுசீலா, கணவர் என்ன முடிவை எடுக்கலாம் என்று ஆலோசனைகள் கூறுவார். இப்படிப் பல பெண் பாத்திரங்கள் வலிமையுடன் வடிவமைக்கப்பட்டது பெரிய ஆச்சரியம்தான்.
சந்திரசேகரன் கல்யாணியைக் கண்டு மனஅதிர்ச்சிக்கு உள்ளாக, அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் வேடத்தில் கவிஞர் கண்ணதாசன் நடித்திருந்தார்.
படம் வெளியான காலத்தில் அவர் பாடலாசிரியராக அறியப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
‘ஓ ரசிக்கும் சீமானே’, ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே’, ‘இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம்’ ஆகிய துள்ளல் பாடல்களும், ‘காகாகா..’,
‘நெஞ்சு பொறுக்குதில்லையே’, ‘எல்லோரும் வாழ வேண்டும்’, ‘வாழ்க வாழ்கவே வாழ்கவே வளமாய் எமது திராவிடத் திருநாடு’ ஆகிய புரட்சிப் பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை உடனடியாகப் பெற்றன.
பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் சுதர்சனம் இசையுடன் கலந்து வெளிப்பட்டு ரசிகர்களை ஈர்த்தன.
சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், எம்.எல்.வசந்தகுமாரி, டி.எஸ்.பகவதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, உசேன் ஆகியோர் பின்னணி பாடியது ரசிகர்களைக் கவர்ந்தது.
ஆனால், பின்னாளில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளிலேயே தங்கள் பங்களிப்பைத் தந்தனர்.
படத்தின் வெற்றிக்கு சுதர்சனத்தின் இசையும் முக்கியக் காரணம் என்பதை, இன்றளவும் இப்பாடல்கள் ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பதில் இருந்து உணர முடியும்.
டி.பி.முத்துலட்சுமியிடம் வி.கே.ராமசாமி பாரதிதாசன் புத்தகங்களைக் குறிப்பிட்டுப் பேசும் காட்சியின்போது, ‘அவன் இவன்’ என்று விளிப்பார்.
முன்பின் தெரியாதவர்களை மரியாதையின்றிப் பேசுவது சாதாரண மனிதர்களின் இயல்பு என்றபோதும், அதனை ஒரு கதாபாத்திரத்தின் குரலாக வெளிப்படுத்துவது இன்று ஒரு சதவீதம் கூடச் சாத்தியம் கிடையாது.
கருத்து சுதந்திரத்தின் எல்லை எந்த அளவுக்குச் சுருங்கியிருக்கிறது என்பதற்கான ஒரு சோறு பதம் இது.
‘பராசக்தி’க்கு ஒளிப்பதிவு செய்தவர் மாருதிராவ். முழுக்க ஸ்டூடியோவிலேயே எடுக்கப்பட்டாலும், இப்படத்தில் லைட்டிங் அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.
குறிப்பாக, பாத்திரங்களின் உணர்வுக்கேற்ப சூழலில் இருக்கும் ஒளியமைப்பு வேறுபட்டிருக்கும்.
கிளைமேக்ஸில் இடம்பிடித்த மகாநாடு காட்சியில் பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தோன்றும் ஸ்டாக் காட்சி படத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
துண்டுக் காட்சிகளாகவே தலைவர்கள் பதிவைக் காட்டிய திரைப்படங்களில் இருந்து பராசக்தி இந்த விதத்தில் வேறுபட்டு நின்றது.
அது போலவே, பர்மா போர்க்காட்சிகளிலும் குண்டு வீசப்படுவதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் சில நொடிகள் இடம்பெறும். பர்மாவில் என்ன நிகழ்ந்தது என்பதை தமிழ்நாட்டில் உள்ளோர் அறியும் விதமாக அமைந்தது.
கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவின்போது கருணாநிதியின் மறைவையொட்டி அவரது கைவண்ணத்தில் வெளியான படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதி நேரத்தில் ‘பராசக்தி’ திரையிடல் ரத்தானது.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஒரு திரைப்படமாக பராசக்தியின் தேவையும் வீச்சும் என்னவென்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது.
இதுபோன்ற எண்ணற்ற விஷயங்களை எதிர்காலமும் பகிர்ந்து கொள்ளும் என்பதே இப்படத்தைக் காலத்தால் அழியாத பட்டியலில் சேர்க்கிறது!
******
படத்தின் பெயர்: பராசக்தி, தயாரிப்பு: பி.ஏ.பெருமாள் முதலியார், இயக்கம்: கிருஷ்ணன் – பஞ்சு, கதை: எம்.எஸ்.பாலசுந்தரம், திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி, கலை இயக்கம்: ஏ.பாலு, இசை: ஆர்.சுதர்சனம், பின்னணி இசை: ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்ட்ரா,
பாடல்கள்: பாரதியார், பாரதிதாசன், கு.மு.அண்ணல்தங்கோ, மு.கருணாநிதி, கே.ஆர்.காமாட்சி சுந்தரன், உடுமலை நாராயணகவி, ஒளிப்பதிவு: எஸ்.மாருதிராவ், ஒலிப்பதிவு: ஈ.ஐ.ஜீவா, ஜே.ஜே.மாணிக்கம், படத்தொகுப்பு: பஞ்சாபி, நடனம்: ஹீராலால், ஸ்டூடியோ: ஏவிஎம்
நடிப்பு: சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, ஸ்ரீரஞ்சனி, சுசீலா, டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்.
The post தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய ‘பராசக்தி’! appeared first on Thaaii Magazine.